மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான தொழில் முடங்கியதால் 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி இழப்பு: 90 லட்சம் பேர் கடும் பாதிப்பு : அரசு கட்டுமான பணிகளும் ஸ்தம்பிப்பு

சென்னை: மணல் தட்டுபாட்டால் கட்டுமான தொழில் முடங்கியதால் கடந்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 90 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு மட்டும் தினமும் 45 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால், மாநிலம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் செங்கிப்பட்டி, அரசூர் ஆகிய 2 இடங்களில் மட்டுமே மணல் குவாரிகள் செயல்படுகிறது. இந்த குவாரிகள் மூலம் தினமும் 100 லோடு கூட மணல் கிடைப்பதில்லை. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. இதனால், கட்டுமான தொழிலை நம்பியுள்ள 90 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்டுமான நிறுவனங்களுக்கும், மணல் லாரி உரிமையாளர்களுக்கு கடந்த 2 வருடத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 2 மணல் குவாரிகள் மட்டுமே செயல்படுகிறது. ஆன்லைன் முறையில் ஒரு வருடத்திற்கு ஒரு லாரிக்கு 3 லோடுகள் மட்டுமே மணல் கிடைக்கின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால், ஒரு சில லோடுகள் மட்டுமே மணல் கிடைக்கிறது. இதனால், தமிழகத்தில் 17 மருத்துவ கல்லூரிகள், 7 சட்ட கல்லூரிகள்  கட்டுமான பணிகள், மத்திய அரசின் எண்ணூர் துறைமுகம், காட்டுபள்ளி துறைமுகம், பாரத பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டம் போன்ற கட்டுமான பணிகள் மணல் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 வருடங்களாக மணல் தட்டுபாடு காரணமாக கட்டுமான தொழிலை நம்பியுள்ள 90 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மணல் குவாரிகள் இயக்கம் குறைந்த காரணத்தினால், சிமெண்ட் விலை, ஸ்டீல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கட்டுமான நிறுவனங்களுக்கும், மணல் லாரி உரிமையாளர்களுக்கும் கடந்த 2 வருடமாக சுமார் 10 ஆயிரம் கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் அதிகமாக மழை பெய்துள்ளதால், ஆறுகளில் மணல் அளவு அதிகளவில் சேர்ந்துள்ளது. எனவே, இதை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் புதிய மணல் குவாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆன்லைன் மணல் விற்பனை திட்டம் தோல்வி அடைந்த காரணத்தால் மணல் லாரிகளுக்கு குவாரிகளில் இருந்து நேரடியாக மணல் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: