லஞ்ச சோதனையில் சிக்கிய வேலூர் இணை ஆணையர் உட்பட 8 இணை ஆணையர்கள் வணிகவரித்துறையில் மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய வேலூர் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் உட்பட 8 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலூரில் உள்ள மாநில வரித்துறை கோட்ட இணை ஆணையராக விமலா பணியாற்றி வந்தார். இவர், நுண்ணறிவு பிரிவையும் கூடுதலாக கவனித்து வந்தார். இவரது அலுவலகத்தில் கடந்த 30ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.  இந்த சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் பணம் மற்றும் சால்வைகள் பரிசு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, இணை ஆணையர் விமலாவுக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி, காஞ்சிபுரத்தில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், முக்கிய சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர்.

ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக வேலூர் அலுவலகத்தில் இருந்து சேலம் வணிகவரி நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்து செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: வேலூர் வணிகவரி நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் விமலா சேலம் வணிக வரி நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர், , நெல்லை வணிகவரி நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் பிரபாவதி வணிகவரித்துறை ஜிஎஸ்டி மேல்முறையீடு இணை ஆணையர், சேலம் வணிகவரி பிரிவு இணை ஆணையர் சுவாமி நாதன் சென்னை தெற்கு வணிக வரி இணை ஆணையர், சென்னை தெற்கு வணிக வரி இணை ஆணையர் சரஸ்வதி சென்னை நுண்ணறிவு பிரிவு-2 இணை ஆணையர், திருச்சி வணிகவரி இணை ஆணையர் பொன்மாலா வேலூர் வணிகவரி நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர், சென்னை கிழக்கு வணிகவரி இணை ஆணையர் விஸ்வநாதன் திருச்சி வணிகவரி இணை ஆணையர், மதுரை வணிகவரி இணை ஆணையர் சிவாஹரிணி மதிப்பு கூட்டு வரி மற்றும் தணிக்கை இணை ஆணையர், சென்னை நுண்ணறிவு பிரிவு-2 இணை ஆணையர் நாரயணன் சேலம் வணிக வரி இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தால் இணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது மற்றும் அவர்களை பணியிட மாற்றம் செய்வது வழக்கம். மேலும், அவர்கள், வரி வசூல் இல்லாத சாதாரண பணியில் தான் அவர்களை நியமிக்க வேண்டும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கிய அதிகாரிக்கு நுண்ணறிவு பிரிவில் பொறுப்பு வழங்கியுள்ளது. இதே போன்று அதிகாரிகள் பலருக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, வணிகவரித்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: