டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் முன் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் : இஸ்ரேல் தூதர் ரான் மால்கா பேட்டி

புதுடெல்லி: டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மால்கா சந்தேகம் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழா நிகழ்ச்சியை நிறைவு செய்யும் விதமாக, டெல்லி விஜய் சவுக் பகுதியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில், இங்கிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் லுத்தியன்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மாலை 5 மணி அளவில் சக்தி குறைந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. தூதரகம் அருகில் உள்ள நடைபாதையில் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் நின்றிருந்த 4 கார்களின் முன்பக்க கண்ணாடிகள் மட்டும் உடைந்தன. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அம்மோனியம் நைட்ரேட் என்ற ரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  

இந்த நிலையில், டெல்லியில் தூதரகம் முன் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் பயங்கரவாதிகளின் சதியாக இருக்கலாம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மால்கா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தைக் குறிவைத்து குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது; குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனைத்து தடயங்களும் சேகரிக்கப்பட்டு, புலனாய்வு நடத்தப்படுகிறது.இஸ்ரேலிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர்.குண்டுவெடிப்பு சதி குறித்து கண்டறிய இந்தோ- இஸ்ரேல் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விசாரணை தொடர்பாக இந்திய அதிகாரிகளுக்கு இஸ்ரேல் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. நேற்று இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகள் முழு நடைமுறைக்கு வந்ததற்கான 29வது ஆண்டு தினமும் கொண்டாடப்பட்டது.ஆகவே, அனைத்து வகையிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்.  கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் தூதரகத்திற்கு சற்று தொலைவில் இஸ்ரேல் நாட்டு தூதர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடந்தது.  அதனுடன் இந்த தாக்குதல் தொடர்பு கொண்டிருக்கலாம்.இந்த தாக்குதல் நடந்த விதம் அந்த வகையை சேர்ந்த ஒன்றாக இருக்கலாம் என்றார்.

Related Stories: