தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்: பழநியில் தேரோட்டம் காண லட்சக்கணக்கில் குவிந்தனர்

சென்னை: தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது. பழநியில் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.  திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முத்திரை நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு வள்ளி - தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியாளில் சண்முக நதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.  மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதையொட்டி வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் முன்பிருந்து விநாயகர், வீரபாகு ஆகியோர் தனித்தனி தேர்களில் ரதவீதிகளில் உலா வந்தனர். தொடர்ந்து பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க தைப்பூச தேர் ரதவீதிகளில் உலா வந்தது. நேற்று முன்தினம் முதலே பழநியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் அலகு குத்தியும், பல்வேறு காவடி சுமந்தும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பரங்குன்றம்: தைப்பூசத்தையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று மாலை பழநியாண்டவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயில் வளாகம், கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி அலைவாயுகந்த பெருமான் உள்பிரகாரத்தில் எழுந்தருளினார். இதேபோல தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.

வடலூர் வள்ளலார் சபையில் 7 திரை விலக்கி ேஜாதி தரிசனம்

வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் 150வது ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டு நேற்று காலை 6 மணிக்கு கருப்பு திரை, நீலத் திரை, பச்சை திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மை திரை, கலப்பு திரை ஆகிய ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்ற தாரக மந்திரத்தை பக்தி பரவசத்துடன் உச்சரித்து கொண்டே ஜோதி தரிசனம் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, இன்று அதிகாலை 5.30 மணிளவில் ஜோதி தரிசனம் நடந்தது.

Related Stories: