வேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு..!!

சென்னை: வேதா நிலைய கட்டிடத்துக்குள் செல்ல அனுமதிகோரி தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. தொடர்ந்து, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை கையகப்படுத்துவதை எதிர்த்தும் இழப்பீடு தொகை நியமிக்கப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை என்பது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று நடைபெற்றது.

அச்சமயம் மனுதாரர் தரப்பில் நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பாக திறப்பு விழா நடத்தக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. ஆனால் அரசு தரப்பில், எந்த உரிமையும் கிடையாது என்றும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று இடைக்கால தீர்ப்பினை வெளியிட்டார். அதில், வேதா நிலையத்திற்கான திறப்பு விழாவை நடத்தி கொள்ளலாம். அதேவேளையில் வளாகத்தை மட்டுமே திறக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கபடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கட்டிடம் திறக்கக்கூடாது, உடைமைகளை கணக்கெடுக்கவில்லை, மக்கள் அனுமதி இல்லை போன்றவை தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக, தலைமை நீதிபதி அமர்வு முன்பு நாளை விசாரிக்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளதால் முதல்வர், துணை முதல்வர் வேதா நிலையத்திற்குள் செல்வார்கள்.

Related Stories: