பூந்தமல்லி அருகே பிளாஸ்டிக், மரப்பொருள் குடோனில் தீ விபத்து: பல கோடி பொருட்கள் சேதம்

திருவள்ளூர்: பூந்தமல்லியை அடுத்த உட்கோட்டை பகுதியில் தனியார் குடோன் உள்ளது. இதில் பிளாஸ்டிக் மற்றும் மரப்பொருள்கள் உள்ளன. இங்கு 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்  ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது கிடங்கின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இது குறித்து இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த 10 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீ மளமளவென எரிய தொடங்கியதால் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிய தொடங்கியது. இதனையடுத்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், ஆவடி, பேரம்பாக்கம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: