டிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு

புதுடெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணி கலவரமாக மாறியதையடுத்து, விவசாய சங்கங்கள் மீது டெல்லி போலீசார் 22 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த கலவரத்தை காரணமாக காட்டி, 60 நாட்களாக  நீடித்து வரும்  விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நேற்று அரங்கேறிய வன்முறை சம்பவங்கள் குறித்த முழு விவரங்களை, டெல்லி போலீசார் இன்று மதியம்  உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.  டெல்லியில் பதற்றம் நீடிப்பதால் உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் இல்லம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடித்து வரும் பகுதிகளில் மெட்ரோ ரயில்  நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு  அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, டெல்லி எல்லையில் முக்கிய சாலைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 4  மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2  மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு  ஏற்படவில்லை. இதையடுத்து குடியரசு நாளான நேற்று, விவசாயிகள் டெல்லியில் டிராக்டர்  பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

‘கிழக்கு டெல்லி, முகர்பா சவுக், காசிபூர், சீமாபுரி, டிக்ரி பார்டர், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 8 அரசு பஸ்கள், 17 தனியார் வாகனங்களை விவசாயிகள் அடித்து நொறுக்கியுள்ளனர். பயங்கர ஆயுதங்களால்  விவசாயிகள் தாக்கியதில் 86  போலீசார் காயமடைந்துள்ளனர். காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்’ என்று டெல்லி போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.இதையடுத்து பேரணியின் போது நடந்த கலவரம், வன்முறை சம்பவங்களுக்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஒருங்கிணைந்த  விவசாய சங்கங்களின் அமைப்பு) பொறுப்பேற்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கலவரச் செயல்களில் ஈடுபட்டது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது, பயங்கர ஆயுதங்களால் அரசு ஊழியர்களை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில், 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில்  கிழக்கு டெல்லியில் நடந்த கலவரம்  தொடர்பாக உடனடியாக நேற்று மாலையே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பேரணியில் வன்முறை வெடித்ததையடுத்து, உடனடியாக போராட்டக் களங்களுக்கு திரும்புமாறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று மாலை  வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து டிராக்டர்கள்  அனைத்தும் நேற்று இரவு 10.30 மணியளவில் டெல்லி எல்லைகளுக்கு திரும்பின.

டெல்லி காவல்துறை உயரதிகாரிகள் கூறுகையில், ‘‘டிராக்டர் பேரணிக்கு நண்பகல் 12 மணிக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், 8 மணிக்கே பேரணியை துவக்கியதே வன்முறைகளுக்கு காரணம்.  அனுமதிக்கப்படாத சாலைகளில் பேரி  கார்டுகள், தடுப்புகளை உடைத்துக் கொண்டு விவசாயிகள் முன்னேறினர். ,சிங்கு பார்டரில் இருந்து 7 ஆயிரம் டிராக்டர்களில் வந்த விவசாயிகள், காலை 8.30 மணிக்கு, டெல்லியின் மத்தியப் பகுதியில் உள்ள காவல்துறை தலைமை  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தடுக்க  முயன்ற போலீசாரை, விவசாயிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். அதுதான் கலவரத்தின் துவக்கம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கலவரத்தை காரணமாக காட்டி, டெல்லியை முற்றுகையிட்டு 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை மத்திய அரசு  தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.  நேற்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த முழு விவரங்களை, இன்று மதியம் உச்ச நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த  விவரங்களின் அடிப்படையில் வன்முறை சம்பவங்களில்  ஈடுபட்டவர்கள் மீது மேலும் வழக்குகள் பதியப்படும் என்றும், சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  

ஆனால் மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாரின் இந்த குற்றச்சாட்டுகளை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘சமூக விரோத கும்பல்கள், அரசியல் கட்சிகளின்  தொண்டர்கள் நேற்று பேரணியில்  ஊடுருவியுள்ளனர். இதில் மத்திய அரசின் ஏஜென்சிகளின் பங்கும் உள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுமாறு, நாங்கள் கடந்த 6 மாதங்களாக வலியுறுத்தி  வருகிறோம். 60 நாட்களாக அமைதியான முறையில் போராடி வருகிறோம். ஆனால் எங்களை  மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, மணிக்கணக்கில் காக்க வைத்து, அவமானப்படுத்தினர்.  டிராக்டர் பேரணி நடத்தும் நிலை உருவாக, மத்திய அரசுதான்  முழு காரணம்’ என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே 2ம் நாளாக இன்றும் டெல்லியில் இணைய சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து வலைதளங்களும் இன்றும் முடக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு 12 மணி முதல்  டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நீடிப்பதால் 20 கம்பெனிகள் அடங்கிய துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நீடிக்கும்  பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் 2ம் நாளாக  இன்றும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து டெல்லியில் அமைதி திரும்பியது.

செங்கோட்டை கலவரத்தில் நடிகருக்கு தொடர்பு

செங்கோட்டையில் நடந்த செயல்களுக்கும், விவசாய சங்கங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், ‘பஞ்சாப்பை  சேர்ந்த நடிகர் தீப் சிந்து,  இளைஞர்களை செங்கோட்டை நோக்கி அழைத்து சென்றார். இவருக்கும் பாஜவுக்கும் தொடர்பு உள்ளது. இவரிடம் இருந்து விவசாயிகள் விலகி நிற்க வேண்டும்.

மத்திய அரசின் சில ஏஜென்சிகளின் சதித்திட்டத்தை தீப் சிந்து வெற்றிகரமாக நேற்று அரங்கேற்றி விட்டார். விவசாயிகளின் புனிதமான போராட்டத்தை, கலவரமாக மாற்றி, அவப்பெயர் ஏற்படுத்த மத்திய  அரசு மேற்கொண்டு வரும்  முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையாது. 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் விசாரிக்க கோரிக்கை

மும்பை சட்டக்கல்லூரி மாணவர் அஷீஸ் ராய் (20). டெல்லியில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக, இவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்  கூறியுள்ளதாவது: குடியரசு நாளில்  டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்கப்பட்டது. நேற்று நடந்த பேரணியில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அரசு பஸ்கள்,  தனியார் வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துகள்  சேதப்படுத்தப்பட்டுள்ளன.

செங்கோட்டையில் தேசியக்கொடி இறக்கப்பட்டு, வேறு ஒரு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் கவுரவம் மற்றும் கண்ணியம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனமும் அவமதிக்கப்பட்டுள்ளது.  இந்த செயல்கள் மக்களின் உணர்வுகளை  பாதிப்பதாக அமைந்தன. எனவே நேற்று நடந்த கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து, விசாரணை நடத்த வேண்டும். டிராக்டர் பேரணியில்  பங்கேற்ற சமூக விரோதிகளை அடையாளம் காண, சிறப்பு  விசாரணைக் குழு அமைக்க வேண்டும். இந்த வன்முறைகளுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கோரியுள்ளார்.

Related Stories: