வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை மருத்துவர் இந்திரா தேவி

கண்ட கனவுகளும்… நிஜமாகியவையும்…

வாழ்வென்பது ஒரு கலை, அதனை பேசும் பேச்சில், உடுத்தும் உடையில், சிரிக்கும் சிரிப்பில், அலங்கரிக்கும் வீட்டில், சமைக்கும் உணவில், எழுதும் எழுத்தில், கொண்டாடும் விழாக்களில், கொண்ட நம்பிக்கையில், உணரும் உணர்வில் உணரலாம். அருந்தும் தேநீரில் ஆரம்பித்து எஞ்சியுள்ள கனவுகளுடன் முடிவதே இவ்வாழ்க்கை. அதில் காணும் கனவுகள் கலையாமல் இருக்க போராடுகிறோம். எதிர்பார்ப்புகள் நடந்தாலும் எதிர்விளைவாக நடந்தாலும் வாழ்வதென்பது ஒரு கலை, அதில் நம் கனவுகளை கலையவிடாதீர்கள் என்கிறார் இயற்கை மருத்துவர் இந்திரா தேவி.

‘‘கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் செய்வதே லட்சியக்கனவு’’ என்று சொன்னார் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். அந்த வார்த்தைகள் இன்றைக்கு எல்லோருடைய மனதிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் என்பது குளத்தில் வசிக்கின்ற மீனுக்கும் வருகின்ற ஒரு சுகமான காய்ச்சல் என்றான் ஒரு கவிஞன். அது எப்படியோ அது போன்று  இயற்கையானதே ஒவ்வொரு மனிதருக்குமான லட்சியக் கனவு. கூட்டுக் குடும்பத்தில் பிறந்த நான் சிறுவயதில் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து படித்தேன்.

என் தந்தை சுப்பிரமணி ஒரு மெக்கானிக், அவரது உழைப்பையும், திறமையும் கண்டு வியந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் அதிகாரி என் தந்தைக்கு ஆந்திராவில் உள்ள ராம்கோ சிமென்ட் நிறுவனத்தில் உயர் மெக்கானிக் பதவியை வாங்கிக் கொடுத்தார். எங்கள் வாழ்க்கையில் ஒளி பிரகாசிக்கத் தொடங்கியது. எனது தாயார் பத்மாவதி அப்பாவுக்கு எல்லா வகையிலும் துணை நின்றார். என்னோடு பிறந்தவர்கள் மூன்றுபேர். ஒரு அண்ணன், எஞ்சினியராக உள்ளார். தங்கை மருத்துவராக உள்ளார்.

படிப்புதான் தன் மக்களை ஓர் உன்னத நிலைமைக்கு கொண்டு வரும் என நினைத்த எங்கள் பெற்றோர் அரும்பாடுபட்டு வளர்த்தனர். எனது அம்மாவுக்கு போலீஸ் வேலை கிடைத்தும் பிள்ளைகளை உடனிருந்து கவனித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக அரசு பணியை தியாகம் செய்தார். என் தந்தை அனுப்பும் பணத்தை வைத்து என்னை தனியார் கான்வென்டில் படிக்க வைத்தார். அப்போதுதான் நான் மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளுடன் உலாவர ஆரம்பித்தேன். நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற அதுவே என் மருத்துவர் கனவுக்கு முதல் படியாக அமைந்தது.

குழந்தைகளின் கனவுகளை நனவாக்க அரும்பாடுபட்ட தாய் எங்களுக்கு அமைந்ததாலேயே, நான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியம் நிறைவேறியுள்ளது. பாண்டிச்சேரியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் என் தாய்மாமா செல்வராஜ் தான் மருத்துவத்திற்கான வழிகாட்டியாக அமைந்தார். எனக்கு பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இயற்கை மருத்துவம் என்பதே சிறந்தது, அதனால் அதைப் படி என எனக்கு அறிவுறுத்தியவரும் என் தாய்மாமாதான். அதனால், யோகா மற்றும் நேச்சு ரோபதியில் சேர்ந்தேன்.

ஆரம்பத்தில் அதன் முக்கியத் துவத்தைப் பெரிய அளவில் உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அன்றைக்கு எனக்கு கிடைத்த மூன்று மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களான மணவாளன், ஹிமேஸ்வரி, வெங்கடேஷ்வரன் ஆகியோர் இயற்கை மருத்துவம் குறித்து விளக்கிய விதம் அதன் மீது பெரியதொரு ஆர்வத்தை அதிகப்படுத்தியது. எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் என்னை பட்டை தீட்டி ஜொலிக்க வைத்தனர். ஐந்தரை ஆண்டுகால மருத்துவப் படிப்பில் கற்றுக்கொண்ட பாடம் மற்றும் அனுபவம் என் தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியது.

என் மனதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையின் பெருமையும், சமூக சேவையின் முக்கியத்துவமும் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதுவே நான் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெறவும் தூண்டுதலாக இருந்தது. நான் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, என் தாய்க்கு இடதுபக்கம் வாதம் ஏற்பட்டு நோயால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கை ஆனார். நான் கற்றுக்கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தைக் கொண்டு சிகிச்சை அளித்ததன் பயனாக குணம் கிடைத்தது.

படித்து முடித்த உடனேயே மருத்துவ சேவையை ஒரு தனியார் கிளினிக்கில் துவங்கினேன். என் தாய்க்கு நான் அளித்த சிகிச்சையால் குணம் கிடைத்தது போன்று மற்றவர்களுக்கும் இயற்கை மருத்துவத்தால் குணம் கிடைக்க வேண்டும் என்று  அன்று நான் உறுதி கொண்டேன். தனியார் கிளினிக்கில் பணிபுரியும்போதே  மாஸ்டர் டிகிரி இன் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் ( Master Degree in Hospital Management (M.B.A)(HM)  நிறைவு செய்தேன். அதன் பயனாக வெளிநாட்டில் நல்ல வருமானம் நிறைந்த வேலை வாய்ப்பு வந்தது.

அதேநேரத்தில் நான் படித்திருந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. நான் பிறந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அதிக வருமானம் தரும் வெளிநாட்டு வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்தும் அதை புறக்கணித்தேன். பணியில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் எல்லாருடைய ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது. கணவர் பரணிதரன் தகவல் தொழிற்நுட்பத் துறையில் பணிபுரிகிறார்.

என்னை புரிந்துகொண்டவராய், எல்லா நிலையிலும் எனக்கு துணை நிற்பவராய் அமைந்தது கடவுள் கொடுத்த வரம் என்பேன். நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய் என்று தன்னம்பிக்கை தருபவர். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். அன்போடு கணவரும் வீட்டுப் பொறுப்பில் துணை நின்று நடத்துவதால்,  என்னால் மருத்துவத்தில் தடையின்றி சேவை செய்ய முடிகிறது. கல்வி, மருத்துவம் வியாபாரமாகி விட்ட நிலையில், இன்றைய நவீன மருத்துவ முறைகள் மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்த மக்கள் இயற்கை மருத்துவத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

விஞ்ஞானம் வளர்ந்து அரிய பல நன்மைகள் விளைந்தாலும் இயற்கையை யாராலும் மிஞ்சிவிட முடியாது. அந்த இயற்கை மருத்துவ முறைகளை பின்பற்றினால் நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவுடன் 100 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வருகின்றது.

எல்லா சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை மருத்துவம் என்பது மருந்தில்லா மருத்துவம். இதுகுறித்து பல விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நோய் விழிப்புணர்வு சொற்பொழிவுகள் நடத்தி வருகிறேன். என்னுடைய லட்சியக் கனவு எல்லா தரப்பு மக்களும் இந்த இயற்கை மருத்துவ சிகிச்சையில் பயன் பெற்று நோயில்லா வாழ்வை இயற்கையாகவே பெற வேண்டும் என்பதாகவே இருக்கிறது. ‘‘இயற்கையோடு இணைந்து வாழ்வோம், நோயற்ற வாழ்வை பெறுவோம்’’ என முத்தாய்ப்பாய் முடித்தார் இயற்கை மருத்துவர் இந்திரா தேவி.

Related Stories: