தொழிற்சாலை பணிகளில் சிறுவர்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: தொழிற்சாலைகளில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் எச்சரித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தொற்று காலத்தில் குழந்தைகளை பாதித்தது மற்றும் அவர்களை பாதுகாத்த விதம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது. எஸ்பி சண்முகப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு பின், தேசிய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

காஞ்சிபுரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. தொழிற்சாலையில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியிருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலையை பூட்டி சீல் வைக்கவும் அதிகாரம் உள்ளது. பணிக்கு சேர்க்கும்போது அவர்கள் சிறுவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தால், அவர்களது ஆதார் அட்டை, சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே பணியில் சேர்க்க வேண்டும். சமீபத்தில், கோயில்கள் முன் பிச்சை எடுத்த 18 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றார். நீதிபதி செந்தில்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் வி.கே.பழனி, மாவட்ட குழந்தைகள் நலக் குழும தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர் சக்திவேல், மனித வர்த்தக கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>