72வது குடியரசு தின விழா சென்னையில் இன்று கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடி ஏற்றுகிறார்: வீரதீர செயலுக்கான பதக்கத்தை முதல்வர் வழங்குகிறார்

சென்னை: நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். நாடு முழுவதும் 72வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதற்காக, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவப்படும். தேசியக்கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார்.

இதையடுத்து ராணுவ படை பிரிவு, வான் படை, கடலோர காவல் படை, சிபிஆர்எப், ஆர்பிஎப், தமிழ்நாடு சிறப்பு காவல், தமிழ்நாடு கமாண்டோ ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, வனத்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, தேசிய சாரணர் படை உள்ளிட்ட வீரர்களின் கண்கவர் அணிவகுப்பும், செய்தித்துறை, காவல்  துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை துறை, சுற்றுலா துறை உள்ளிட்ட 25 துறை  சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு  நடக்கிறது. சுமார் 30 நிமிடம் நேர  நிகழ்ச்சி முடிந்ததும், கவர்னர், முதல்வர் அங்கிருந்து விடைபெற்று செல்வார்கள்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ - மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த கலைநிகழ்ச்சிகளை பார்க்கவும், கவர்னர் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஹெலிகாப்டர் மலர் தூவும் நிகழ்ச்சியை பார்க்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ - மாணவிகள், குழந்தைகள் மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையின் இரண்டு பக்கமும் கூடி பார்வையிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுமக்கள், மாணவர்கள் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் பார்க்க வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு தின விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நீதிபதிகள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: