அரசு கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடையான நெல்லை அடிமாட்டு விலைக்கு வாங்கும் அவலம்-விவசாயிகள் குமுறல்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் 155 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று கடந்த வாரம் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா அறிவித்திருந்தார். நாட்கள் பல கடந்தும் இதுநாள்வரை கொள்முதல் நிலையங்கள் திறந்தபாடில்லை. ஏற்கனவே நிவர் மற்றும் புரெவி புயலால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி விவசாயம் 1 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் பகுதி அளவிற்கு தண்ணீர் மூழ்கியதுடன் 80சதவீத பயிர் சேதமாகியது.

இதற்கு தமிழக அரசு இப்பொருள் மான்யம் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் கிடைத்ததோ ஹெக்டேர் ஒன்றுக்கு சராசரியாக ரூ.10 ஆயிரம் மட்டுமே. கேட்டால் பாதிப்பு சதவிகிதப்படி பிரித்து வழங்கியுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நிவாரணம் கண் துடைப்பாகிப்போன நேரத்தில் 6 வது முறையாக பெய்த மழை அறுவடை சமயத்தில் மேலும் விவசாயிகளை பாதிப்படைய செய்தது. தொடர்மழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கடந்த ஓரு வாரமாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

ஏக்கர் ஒன்றுக்கு 75 மூடை மகசூல் கிடைப்பது வழக்கம். அதாவது ஏக்கர் ஒன்றுக்கு 4,500 கி.கி. மகசூல் கிடைத்து வந்தது. தற்பொழுது ஏக்கர் ஒன்றுக்கு 1,500 கி.கி சராசரியாக மகசூல் கிடைத்து வருகிறது. தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்காததால் தனியார் வியாபாரிகள் ரூ.15 கி.கி. என்ற விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். அரசும் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தும் இதுநாள்வரை திறக்கவில்லை.

குறிப்பாக செம்பனார்கோவிலை ஒட்டியுள்ள திருச்சம்பள்ளி ஊராட்சியில் 1000 ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்தகையுடன் அறுவடை நடைபெற்று வருகிறது. 60 சதவீத அறுவடை முடிவடைந்துள்ளது. அனைத்து நெல்லையும் தனியார் வியாபாரிகள் அள்ளிச் சென்று விட்டனர். நெல்மூட்டைகளை காவல்காக்க இயலாததால் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு நெல்லை தனியாரிடம் விற்பனை செய்யும் கொடுமை நிகழ்கிறது. அரசு உடனே திருச்சம்பள்ளி பகுதியில் அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: