புதுக்கண்மாய்க்குள் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் தொற்று அபாயம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருமயம் : அரிமளம் அருகே கண்மாய்க்குள் கொட்டப்படும் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இருந்து சேத்துமேல் செல்லஅய்யனார் கோயில் செல்லும் வழியில் உள்ளது புதுக்கண்மாய். இங்கு கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி கடைகளில் மிஞ்சும் கழிவுகளை ஒருசிலர் கொட்டி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது மழை பெய்து கண்மாயில் நீர் நிறைந்துள்ளதால் கண்மாயில் கொட்டப்பட்ட கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் திரியும் நாய்கள் அழுகிய கழிவுகளை கவ்விக்கொண்டு சாலையோரம் இழுத்து போட்டு விடுவதால் துர்நாற்றம் தாங்காமல் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்வதோடு நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் கண்மாயில் இறைச்சிக் கழிவுகள் அழுகி மிதப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் புதுக்கண்மாயில் கொட்டப்படும் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு மேலும் இதுபோல் கொட்டாமல் இருக்க அப்பகுதி மக்களை அறிவுறுத்த வேண்டும் எனவும், மீறி இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: