ஜெயலலிதா சிலை திறப்பு விழாவுக்கு மாணவிகள் புடவை அணிந்து வர உயர் கல்வித்துறை உத்தரவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலை திறப்பு விழாவுக்கு கல்லூரி மாணவிகள் புடவை அணிந்து வர வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலை சென்னை உயர்கல்வி மன்ற வளாகமான, லேடி வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க உள்ளார். இது தவிர அந்த உயர்கல்வி மாமன்றம் இருக்கின்ற வளாகத்தை அம்மா வளாகம் என்றும் பெயர் மாற்றம் செய்ய உள்ளனர்.

இதற்கான விழா வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள மாநிலக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரிகளில் படிக்கின்ற மாணவிகள் புடவை அணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்து பங்கேற்க வேண்டும் என்று மேற்கண்ட மூன்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மாகாண கல்லூரியின் முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதற்கான முன்னோட்ட விழா இன்று மாகாண கல்லூரி வளாகத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவ- மாணவியர் பங்கேற்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை கண்காணிக்க ஒவ்வொரு துறையில் இருந்தும் தலா 2 பேராசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அன்றைய தினம் வருகைப்பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோட்ட விழா இன்று காலை 11 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. மேலும், 26ம் தேதி முதல் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட சிலை திறப்பு விழாவுக்கு மாணவியர் வர வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது மாணவியர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: