கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா தண்ணீர் பிப்.1ம் தேதி முதல் நிறுத்தம்: தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம்

சென்னை: தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தபடி கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு ஆந்திர அரசு தர வேண்டும். கடந்த செப்டம்பர் 18ம் தேதிக்கு பிறகு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுவரை 6.3 டிஎம்சி வரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தந்துள்ளது. இதற்கிடையே சென்னையில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பெய்தது. எனவே, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

மேலும், சோழவரம், கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியிலும் போதுமான நீர் இருப்பு உள்ளது. எனவே, கிருஷ்ணா நீர் தற்போது திறக்க வேண்டாம் என்று கிருஷ்ணா நதி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த சூழலில் பொதுப்பணித்துறை சார்பில் ஆந்திர நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. அதில், கண்டலேறு அணையில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி முதல் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும். ஏப்ரல் மாதத்துக்கு பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் போதும். அப்போது மீதம் தர வேண்டிய 6 டிஎம்சி நீரை தர வேண்டும் என்று கூறியுள்ளது.

Related Stories: