கொரோனா காலத்தில் சேவையாற்றிய டாக்டர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா: சென்னையில் நடந்தது

சென்னை: கொரோனா காலத்தில் மக்கள் சேவையாற்றியவர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கொரோனா தொற்று கால கட்டத்தில் மக்கள் சேவையாற்றிய மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அமைப்பினர் ஆகியோருக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவுக்கு மாநிலச் செயலாளர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் முஹம்மது ரசின், மாவட்ட தலைவர்கள் பக்கீர் முகமது, சதக்கத்துல்லா, அபுபக்கர், அல்தாப், நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாநில தலைவர் பாத்திமா ஆலிமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சென்னை மண்டல தலைவர் ஆபிருதீன் மன்பயீ வரவேற்றார்.

மாநிலத் தலைவர் முகமது சேக் அன்சாரி பேசுகையில், “கொரோனா காலத்தில் மக்கள் சேவையாற்றிய தன்னார்வலர்களின் பணிகள் மகத்தானது. இந்திய மக்களுக்கு இன்னல்கள் ஏற்படுகின்ற சமயத்தில் நாங்கள் முன்னணியில் களப் பணியாற்றினோம். இனிவரும் காலங்களிலும் எப்போதும் மக்களுக்காக முழுமூச்சுடன் சேவையாற்றும்”  என்றார். தொடர்ந்து மக்கள் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு மாநிலத் தலைவர் முகமது அன்சாரி, துணைத் தலைவர் காலித் முகமது, திரைப்பட இயக்குனர் அமீர் ஆகியோர் விருதினை வழங்கி கவுரவித்தனர். மாவட்ட தலைவர் அபுபக்கர் சாதிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மண்டல செயலாளர் அஹமது முகைதீன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: