ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கண்டனம்; தமிழ் ஒரு மொழியல்லவா?, தமிழர்களுக்கென்று கலாச்சாரம் இல்லையா? என ராகுல் ஆவேசம்

திருப்பூர்: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 மாதங்களில் வரவிருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து இருந்தார்.

அதன்படி, ராகுல்காந்தி எம்.பி. நேற்று கோவை வந்து பிரசாரத்தை தொடங்கினார். அந்த வகையில் திருப்பூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்; தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் யாரும் ஏமாற்ற முடியாது.  நாட்டின் நிலை மிக மோசமாக உள்ளது. உங்கள் சிப்பாயாக, உங்களில் ஒருவனாக எனது குரல் டெல்லியில் ஒலிக்கும். பன்மொழி கொண்ட இந்தியாவை ஏன் ஒரே மொழி ஆளவேண்டும்; தமிழ் கலாச்சாரம் இந்தியாவில் மேலோங்கியுள்ளது. ஏன் தமிழர்களும், பெங்காலிகளும் ஒருதாய் மக்களாக இருக்க முடியாது? இந்தியர்களின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் போராடி வருகிறது எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து ராதாபுரத்தி நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்; ஒரே நாடு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். தமிழ் ஒரு மொழியல்லவா? தமிழர்களுக்கென்று கலாச்சாரம் இல்லையா? வரலாறு இல்லையா? வங்கத்தில் பேசுவது தனி மொழியல்லவா வங்க்கத்துக்கு என்று வரலாறு இல்லையா? பஞ்சாபில் பஞ்சாபி மொழி பேசவில்லையா? வடகிழக்கு மாநிலங்களில் தனி மொழி இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

மேலும் பேசிய அவர்; ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியது. லட்சக்கணக்கான மக்களை வறுமைக்கோட்டில் இருந்து உயர்த்தினோம். மோடி அரசு பணமதிப்பிழப்பு செய்து ஏழை, எளிய மக்களின் முதுகெலும்பை உடைத்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான சிறு, தொழில்கள் அழிந்துவிட்டன. தனக்கு நெருக்கமான 5 தொழிலதிபர்களுக்குத்தான் அரசின் நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். தனக்கு வேண்டிய 5 தொழிலதிபர்களுக்கு நன்மை செய்வதற்காக ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினார் மோடி.

ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தை வைத்து தான் இந்தியா என்ற நாடு எழுந்துள்ளது. நாட்டின் அஸ்திவாரத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்துகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு எத்தனை ஏழை, எளிய மக்களின் கடன்களை அடைந்தார் மோடி? புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு என்ன உதவி செய்தார் மோடி? சீன ராணுவம் எல்லைகளை தாண்டி உள்ளே வந்த பிறகும் அமைதியாக இருக்கிறார் மோடி எனவும் கூறினார்.

Related Stories:

>