மின்கட்டணத்தில் தொடர்ந்து நிலுவை உள்ளாட்சி அமைப்புகளிடம் ரூ.35 கோடி கட்டணம் வசூல்

சென்னை: மின்கட்டணத்தில் தொடர்ந்து பலகோடி ரூபாய் அளவுக்கு நிலுவைத்தொகையினை உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள நிலையில், அவற்றிடமிருந்து ரூ.35 கோடி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ள பாக்கித்தொகையை வசூலிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை மின்வாரியம் முடுக்கி விட்டுள்ளது.  தமிழகத்தில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் இலவசமாகும். இதற்காக மின்வாரியத்திற்கு ஏற்படும் செலவை அரசு மானியமாக வழங்கி வருகிறது.  வீடு சார்ந்த மின்இணைப்புகளை பொறுத்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று கணக்கெடுத்து வருகின்றனர்.அப்போது அங்குள்ள மீட்டரில் பதிவாகியிருக்கும் அளவை எடுத்து நுகர்வோரின் கணக்கீட்டு அட்டையில் எழுதிவிட்டு செல்வார்கள். பிறகு மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு வந்து கணக்கெடுத்துவிட்டு சென்ற 20 தினங்களுக்குள் நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். இல்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடும்.

பிறகு அபராதத்துடன் மின்கட்டணத்தை செலுத்த நேரிடும். எனவே, குறிப்பிட்ட தினங்களுக்குள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை, மின்வாரியத்திற்கு மக்கள் செலுத்தி வருகின்றனர். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவை குறிப்பிட்ட நாட்களுக்குள் மின்கட்டணத்தை செலுத்துவதில்லை. இவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது உள்ளாட்சி அமைப்புகளில் மின்பயன்பாடு குறித்து கணக்கெடுத்ததில் இருந்து 60 நாட்கள் வரை மின்கட்டணம் செலுத்தலாம் என்பதாகும். இந்த விதிமுறையின் கீழ் கூடுதல் அவகாசம் வழங்கியும் பல கோடி ரூபாய் அளவுக்கு, மின்கட்டணத்தில் நிலுவைத்தொகையினை உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ளன. இதனால் மின்வாரியத்திற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட தொகையை உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டும் என மின்வாரியம் வலியுறுத்தி வருகிறது.

அந்தவகையில் 124 நகராட்சிகளைக்கொண்ட 7 மண்டலங்களில் இருந்து ₹20 கோடியே 34 லட்சமும், 9 மாநகராட்சிகளில் இருந்து ரூ.15 கோடியே 41 லட்சமும் மின்கட்டணம் செலுத்துவதற்காக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் முறையாக மின்கட்டணத்தை செலுத்துவில்லை. எனவே, நிலுவைத்தொகையை விரைந்து வசூலிப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் இருந்து ரூ.35 கோடி மின்கட்டணமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் இருந்து மின்வாரிய தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலுவையில் உள்ள கட்டணங்களை வசூலிப்பதற்கான நடவடிக்கையினை மின்வாரியம் முடுக்கி விட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் ரூ.20 கோடி செங்கல்பட்டு, வேலூர், சேலம், தஞ்சாவூர், மதுரை, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய நகராட்சி மண்டங்களில் இருந்து ரூ.20,34,00,000 மின்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>