உடல்நிலை மோசமாவதால் டெல்லி எய்ம்சுக்கு லாலு திடீர் மாற்றம்

ராஞ்சி: ராஷ்டிரிய ஜனதா கட்சித் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் (77), மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு  தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் லாலுவின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளார். இது பற்றி, மருத்துவர்கள் கூறுகையில், ‘‘லாலு பிரசாத்துக்கு கடந்த 2 தினங்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு நிமோனியா தொற்றும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அவரது வயது மூப்பைக் கருத்தில் கொண்டு, மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளோம். அங்குள்ள மருத்துவர்களிடமும் நிலைமையை விரிவாக விளக்கியுள்ளோம்,’’ என்றனர். லாலுவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவருடைய குடும்பத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானத்தின் மூலம் லாலுவின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி, மகன் தேஜ் பிரதாப், தேஜஸ்வி ஆகியோர் ராஞ்சி வந்தடைந்தனர். லாலுவின் உடல்நிலை பற்றி கூறிய தேஜஸ்வி, தனது தந்தையின் உடல்நிலை கவலை அளிக்கும் விதமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

Related Stories: