நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி

கொல்கத்தா: நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 ஆவது பிறந்ததினமான இன்று கொல்கத்தாவின் விக்டோரியா ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். பின்னர் பேசிய அவர்; நேதாஜி எப்போதும் நமக்கு முன்மாதிரியாக உள்ளார். அவரது வாழ்க்கை நமக்கு பாடம்.

இந்தியர்களின் சுதந்திரம் குறித்து நேதாஜி கனவு கண்டார். நாட்டின் தைரியத்திற்கு அடையாள சின்னமாக நேதாஜி உள்ளார். நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நேதாஜி கனவு கண்ட சக்திவாய்ந்த இந்தியா என்ற வளர்ச்சியை உலகமே பார்த்து வருகிறது. பிற நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்குவதை பார்த்தால் நேதாஜி பெருமை அடைந்திருப்பார் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; நமது நாடு தன்னிறைவு பெற அனைவரும் உழைக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே தன்னிறைவு பெற்ற நாடு என்ற இலக்கை வெற்றி பெற முடியும்.

நமக்கு தேவையான பொருட்கள், உள்நாட்டிலேயே தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். நாட்டின் அனைத்து பிராந்திய மொழிகள், கலாச்சாரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் பன்முகத்தன்மையை காக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாகவும் கூறினார்.

Related Stories: