வாடிப்பட்டி அருகே தொடர்மழையால் வேரிலே அழுகி போனது வெங்காயம்: விவசாயிகள் கவலை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்டது மேட்டுபட்டி, கரடிக்கல் கிராமங்கள். முற்றிலும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள இப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெய்யும் பருவமழையை வைத்து காட்டு விவசாயம் செய்வது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெய்த மழையின் மூலம்  சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் வெங்காயம் பயிரிட்டிருந்தனர் இப்பகுதி விவசாயிகள். பயிரிட்டு 90 நாட்கள் ஆகி தை மாதம் விளைச்சல் எடுக்கலாம் என மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். ஆனால் கடந்த வாரம் பெய்த தொடர் மழையின் காரணமாக வெங்காய செடிகள் அனைத்தும் வேரிலேயே அழுக துவங்கி அவற்றின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சுமார் 5 டன் அதாவது 500 கிலோ எடை அளவு வெங்காயம் எடுக்க வேண்டிய இடத்தில் தற்போது 50 கிலோ முதல் 75 கிலோ வெங்காயம் மட்டுமே பலன் எடுத்து வருகின்றனர். இதனால் வெங்காயத்தை எடுக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு  கூலி  கொடுக்கும் அளவிற்கு கூட விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் வெங்காய விவசாயம் பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளது.  இதுதொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை யாரும் வந்து எட்டி பார்க்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் பாதிக்கப்பட்ட வெங்காய பயிர்களை கணக்கிட்டு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: