சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக தமிழகத்தில் கூடுதலாக ஒரு லட்சம் அரசு பணியாளர்களை ஈடுபடுத்த திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் பணிக்கு கூடுதலாக ஒரு லட்சம் அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் திட்டமிட்டபடி கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் விடுபட்டு போனவர்கள் மற்றும் முகவரி மாற்றம் தேவைப்படுவோர், புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கு முறையாக விண்ணப்பிக்க  கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு வரை தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களுக்கு பெயர் சேர்க்க  அனுமதி அளிக்கப்படும். அதுகுறித்த அறிவிப்பு மற்றும் சிறப்பு முகாம்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள, யாருக்கு ஓட்டளித்தோம் என்ற எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 12 மாவட்டங்களில் இந்த பணிகள் நிறைவடைந்துவிட்டது. மற்ற  மாவட்டங்களில் இயந்திரங்களை சரிபார்க்கும் பணி பிப்ரவரி 10ம் தேதிக்கு முன்பாக நிறைவடையும். கடந்த தேர்தலில், தேர்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 4.50 லட்சமாக இருக்கும். இதேபோல தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீஸ் எண்ணிக்கையும் அதிகரிக்கும். தமிழகத்தில்  இப்போது 68 ஆயிரம் ஓட்டு சாவடிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு ஓட்டு சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்ற வகையில் ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. இதன்  காரணமாக ஓட்டு சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்படும். புதிய ஓட்டு சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை அறிக்கையாக அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக தமிழகம் வருவார். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருப்பம்  உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம். விருப்பமில்லாதவர்கள் ஓட்டு சாவடிக்கே வந்து ஓட்டு போட அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>