30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 150 கோடி மதிப்பிலான சொத்து மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், நிலங்கள் உள்ளன. இதில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் சர்வே எண் 452/29  கதவு எண் 181ல் உள்ள சீனிவாசன் மற்றும் மோகனா என்பவர்களின் கட்டுப்பாட்டில் 15 கிரவுண்ட் அதாவது 36,259 சதுர அடி மதிப்புள்ள நிலம் இருந்தது. அந்த நிலத்தில் 13 வீடு, கடைகள் மற்றும் வாகன நிறுத்தங்கள், பள்ளி கட்டிடம்,  ெதாழிற்சாலைகள்  செயல்பட்டு வந்தன.

இந்த நிலத்திற்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போது வரை ₹11 கோடி வரை வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக  கோயில் நிர்வாகம் சார்பில் வாடகையை செலுத்த கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இணை ஆணையர் நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த இணை ஆணையர் நீதிமன்றம், கடந்த மாதம் 16ம் தேதி வாடகை பாக்கி வைத்துள்ளவர்களை இந்து  அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன் படி ஆக்கிரமிப்பாளராக கருதி அகற்ற உத்தரவிட்டது. அதன்பேரில், சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா, உதவி ஆணையர் கவெனிதா தலைமையில் காவல்துறை, வருவாய்த்துறை  அதிகாரிகள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று காலையில் சென்றனர். ஆனால், இதற்கு ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.  இதையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வாடகை பாக்கி முழுவதையும் செலுத்த நிபந்தனை விதிக்கப்பட்டன. இதற்கு, ஆக்கிரமிப்புதாரர்கள்  ஆட்சேபம் தெரிவித்தனர்.

அப்படியெனில் வாடகை செலுத்தாவிட்டால் சீல் வைப்பதை தவிர வேறு வழியில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டு, கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சொத்தின் மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>