பால்தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக ஐடி ரெய்டு

சென்னை: பிரபல கிறித்தவ மத போதகரான பால் தினகரனக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையார், கிரீன்வேஸ் சாலை, தாம்பரம், வானகரம், கோவை உள்ளிட்ட ‘இயேசு அழைக்கிறார்’ பிரச்சார கூடங்கள் மற்றும் கோவையில் உள்ள  காருண்யா பல்கலைக்கழகம், பால் தினகரன் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 25 இடங்களில் 3வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனையில் இயேசு அழைக்கிறார் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை குறைத்து கணக்கு காட்டியும், வெளிநாடு நிதியை இரண்டு விதமான கணக்குகள் மூலம் பராமரித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்  மூலம் பல கோடிக்கு பால் தினகரன் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. பால் தினகரன் தற்போது கனடாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை மற்றும் நன்கொடைகளை அறக்கட்டளை மூலம் வரவு வைத்து அந்த நிதியை பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் பால் தினகரன் பயன்படுத்திய  இ-மெயில் மூலம் கண்டுபிடித்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் 2021ம் ஆண்டின் மிகப்பெரிய சோதனையாக இது கருதப்படுகிறது. எனவே, கனடாவில் உள்ள பால் தினகரனை சென்னைக்கு வர வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. அவர் சென்னை வந்ததும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நேரடியாக விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  3வது நாளாக நீடித்த இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.   சோதனை முடிவிற்கு பிறகு தான் மொத்த சொத்து மதிப்பு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>