சென்னை மாநகராட்சி இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு: கட்டணத்தை உயர்த்தி அடாவடி வசூல்: முன்னாள் படை வீரர்கள் வேலையிழப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும்பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கடற்கரை, பாரிமுனை, தி.நகர், மயிலாப்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் சுமார் 100 இடங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வசதி உள்ளது. இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு  மாநகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இருந்தது. இந்த பணியை, தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்கள் செய்து வந்தனர். இதன்மூலம், முன்னாள் ராணுவ வீரர்கள் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததுடன், தினசரி  ரூ.500 வருமானமும் கிடைத்து வந்தது. கடந்த 25 வருடமாக இது நடைமுறையில் இருந்தது.

சென்னை கடற்கரை பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த, ஒரு மணி நேரத்துக்கு ரூ.5 வசூலிக்கப்பட்டது. 6 மணி நேரத்தில் இருந்து ஒரு நாள் முழுவதும் நிறுத்த அதிகப்பட்ச கட்டணமாக ரூ.20  வசூலிக்கப்பட்டு வந்தது. இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது. இந்நிலையில், மேற்கண்ட பார்க்கிங் பகுதிகளில் கட்டணம் வசூல் செய்யும் பணியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடந்த 5ம் தேதி முதல் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இதன்மூலம் முன்னாள் ராணுவத்தினர் 1,500 பேரும்  அதிரடியாக இந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் புதிதாக பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய நியமித்துள்ள தனியார் நிறுவனம் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்து  வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் கழக பார்க்கிங் பிரிவு தொழிலாளர் செந்தில்குமார், ஆம்னி பஸ் அண்ணாதுரை மற்றும் காதர் ஆகியோர் கூறுகையில், ”சென்னையில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் கட்டணம் வசூலிக்கும் பணியை  ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனத்தினர் காருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.20ம், இருசக்கர வாகனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5ம் வசூலிக்கிறார்கள். முன்னாள் ராணுவத்தினர் இந்த பணியை செய்யும்போது ஒரு நாள் முழுவதும் கார் நிறுத்த  ரூ.20 தான் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்துக்கு பார்க்கிங் கட்டணமே கிடையாது. தற்போது கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கத்தில் இருந்து எம்ஜிஆர் சமாதி வரை கட்டணம் வசூலிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் வரை எம்ஜிஆர் சமாதி அருகே மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டண  கொள்ளை, தனியார் மால்களில் நடைபெறுவதுபோல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், முன்னாள் ராணுவ வீரர்களின் வேலையும் பறிபோய் உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு தனியார் கட்டண வசூலை ரத்து செய்துவிட்டு, முன்னாள் ராணுவ வீரர்களுக்கே மீண்டும் பணியை வழங்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 27ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம்  எதிரே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

Related Stories: