மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து ரூ.9,200 கோடி நிதி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் நிதியாண்டிற்கு மத்திய அரசிடமிருந்து ரூ.9,200 கோடி நிதி பெறப்பட உள்ளது என 9வது மாநில வேலை உறுதி மன்ற குழுக் கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்  திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 9வது மாநில வேலை உறுதி மன்ற குழுக் கூட்டம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று  நடைபெற்றது.

கூட்டத்தில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்-110ன் கீழ் 24.03.2020 அன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் பணி செய்த 26.84 இலட்சம் தொழிலாளர்களுக்கு 2 நாட்களுக்கான சிறப்பு ஊதியமாக ரூ.458/- வீதம் ரூ.123.10 கோடி வழங்கியதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2017-18ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பணிகளின் விவரங்கள், சிறப்பு முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்கள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை 62.86 இலட்சம் குடும்பங்களில் உள்ள 73.40 இலட்சம் பயனாளிகளுக்கு வேலை வழங்கி வாரத்திற்கு ரூ.162 கோடி முதல் ரூ.185 கோடி என்ற வீதத்தில் மொத்தம் ரூ.5,693.09 கோடி ஊதியமாகவும், ரூ.1,740.62 கோடி பொருட்கூறுக்கும் செலவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெரும்பான்மையான ஊரக மக்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டதுடன் ஊரக பொருளாதாரம் நிலையானதாக இருக்க பெரிதும் உதவியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பல்வேறு இயற்கைவள மேலாண்மை மற்றும் நீர் வேளாண் தொடர்பான பணிகள், தனிநபர் சொத்து உருவாக்கும் பணிகள் மற்றும் ஊரக கட்டமைப்பு உருவாக்கும் பல்வேறு பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டதால், அங்கீகரிக்கப்பட்ட 27 கோடி மனித சக்தி நாட்களில் 26.85 கோடி மனித சக்தி நாட்கள் அதாவது 99%  18.01.2021 அன்றே எய்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கும் பொருட்டு தமிழக அரசின் தொடர் முயற்சியால்  கூடுதலாக 5 கோடி மனித சக்தி நாட்கள் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.  இதுவரை ரூ.7,662 கோடி மத்திய மாநில அரசுகளால் நிதி விடுவிக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது.  கூடுதலாக ரூ.1,750 கோடி முதல் ரூ.2,000 கோடி வரை நிதிபெறப்படும். வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக ரூ.9,200 கோடி அளவிற்கு 2020-2021ஆம் நிதியாண்டிற்கு மத்திய அரசிடமிருந்து நிதி பெறப்பட உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திற்காக 28 தேசிய, மாநில/மாவட்ட/ஊராட்சி ஒன்றிய விருதுகளை பெற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆசி பெற்ற பொற்கால ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடானது சிறப்பான முயற்சிகளைக் கையாண்டு, நீர் மேலாண்மை பணிகளை சிறந்த முறையில் செயற்படுத்தியதன் காரணமாக, 2019ஆம் ஆண்டுக்கான 2வது தேசிய நீர் விருது மாநிலங்களுக்கான பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது.

மேலும், 3 மாவட்டங்களில் வேலூர், கரூர் மாவட்டங்களுக்கு நதிநீர் புத்தாக்கம் முயற்சிக்காகவும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு நீர்வள மேலாண்மை முயற்சிக்காகவும், சாஸ்தாவிநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இயற்கைவள மேலாண்மை பணிகளுக்காகவும் விருதுகள் வழங்கப் பெற்றுள்ளது. மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் கூடுதலாக 5.07 இலட்சம் புதிய குடும்பங்களுக்கு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூடுதலாக 7.08 இலட்சம் புதிய பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர்.  முந்தைய வருடங்களைவிட கூடுதலாக கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் 7.86 இலட்சம் புதிய பெண் பயனாளிகளுக்கும், 7351 புதிய மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.ஹன்ஸ்ராஜ் வர்மா இ.ஆ.ப., அவர்கள், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஏ.கார்த்திக், இ.ஆ.ப., அவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி,  இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.ஏ.முகமது ஜான், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.விஜயகுமார், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட கூடுதல் இயக்குநர் திருமதி முத்துமீனாள், மாநில வேலை உறுதி மன்றக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: