தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் அறிவுரை

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க செயலாளர் வித்யாசாகர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக 2020 மார்ச் 16ம் தேதி பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்கள் 24 மணி நேரமும் வீட்டில்  முடங்கியுள்ளனர். சமீபத்திய ஆய்வுகளில், 22.3 சதவீத இளம் மாணவ-மாணவியருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவியர் தூக்கமின்மை, ஆரோக்கிய குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது, நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, குழந்தைகள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதித்துள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி, 50 சதவீத மாணவர்களுடன் இரு அமர்வுகளாக தலா மூன்று மணி நேரம் வகுப்புகள் நடத்தும் வகையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக பள்ளிக்கல்வித் துறை தரப்பில் அரசு சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகள் துவங்கியுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகள் திறப்பு குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டியது மாநில அரசு தான் பள்ளிகள் திறப்பது முக்கியமானது என்றாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேசமயம் பள்ளிகள் திறப்பு தொடர்பாக, எந்த அழுத்தமும் இல்லாமல், அரசு சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும். தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது.தற்போதைய நிலையில் இந்த வழக்கு முன் கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 8 முதல் 10 வாரங்களில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்காவிட்டால் மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்கு தொடரலாம் எனக் கூறி, வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

Related Stories:

>