வரலாறு படைத்தார் பி.வி. சிந்து

நன்றி குங்குமம் தோழி

உலக சாம்பியன் பட்டத்தை தட்டிய முதல் இந்தியப் பெண்

உலக பேட்மின்டன் இறுதிச்சுற்று தொடர், சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் நடைபெற்றது. இதில், பேட்மின்டன் தர வரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுரா நோசோமியை எதிர்கொண்டார். துவக்கம் முதல் அசத்திய சிந்து, விரைவில் செட்டை தன்வசப்படுத்தி 21-19 என்ற கணக்கில் முதல் செட்டையும் 21-17 என்ற கணக்கில்  இரண்டாவது செட்டையும் வென்று, வெற்றியைத் தன்வசப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பிவி சிந்துவின் இந்த ஆண்டுக்கான முதல் சாம்பியன் பட்டம் மற்றும் 14 வது சாம்பியன் பட்டம் இதுவாகும். 2017 இறுதிப்போட்டியில் ஒகுஹராவிடம் அடைந்த தோல்விக்கு இந்த முறை சிந்து பழிதீர்த்துக்கொண்டார் என்றே சொல்லலாம். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த சிந்து, பம்பரம் போல் சுழன்று, ஆவேசமாகத் தன் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மின்னல் வேகம், எதிராளியின் தவறை புள்ளியாக்குவதில் மட்டுமே அவரின் கவனம் இருந்தது. உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், தாய்லாந்து ஓபன் மற்றும் இந்திய ஓபனில் அவருடைய ஆட்டம் வெள்ளியுடன் நின்றது.

ஆண்டு நிறைவடையும் தருவாயில் தங்கத்தை தன்வசப்படுத்தி வெற்றிக்களிப்பில் நின்ற சிந்து, இதன் மூலம் ‘உலக சாம்பியன் பட்டம்' வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையையும் சேர்த்தே படைத்துள்ளார். தொடர்ந்து வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, ``வெற்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இறுதிப் போட்டி வரை வந்தாலும் தொடர்ந்து தோல்வியை அடைந்து வந்தேன். ஆனால் இப்போது, இறுதிப் போட்டியிலும் வென்றுவிட்டேன். இந்த வெற்றி, எப்போதும் என் மனதில் இனிய நினைவாக இருக்கும்.

பல நேரங்களில் நான் எதிர்கொண்ட கேள்வி, ஏன் இறுதிப்போட்டிகளில் தோற்கிறீர்கள் என்பதாகத்தான் இருந்தது. இனிமேல் இந்தக் கேள்வியை நான் எதிர்கொள்ள மாட்டேன் என நினைக்கிறேன். இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளிலும் நான் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது, இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற இத்தருணத்தை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். இந்த ஆண்டு எனக்கு மிகவும் மிக உயர்வாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் முடிந்துள்ளது. அடுத்ததாக வரும் இந்தியன் லீக்கிலும் திறமையாக விளையாடி, சிறப்பான வருடமாக நிறைவு செய்வேன்" என்றார் சிந்து உற்சாகமாக.  

* முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார்.

* ஒலிம்பிக் போட்டியிலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய சிந்து இதுவரை வெள்ளிப்பதக்கம் மட்டுமே வென்றிருந்தார்.

* இந்த ஆண்டு 8 போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சிந்து முன்னேறியும் இரண்டில் மட்டுமே பட்டம் வென்றிருந்தார்.

- மகேஸ்வரி

Related Stories: