நெல்லை முதல் தென்காசி வரை 4 வழிச்சாலை அமைக்க கோரிய வழக்கு: நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை முதல் தென்காசி வரை 4 வழிச்சாலை அமைக்க கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையில்  இருந்து தென்காசி செல்லும் சாலை கேரளாவுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக  உள்ளது. சபரிமலை சீசன், குற்றால சீசன் மற்றும் சுற்றுலா பயணிகள்  செல்லும்  சாலையாக இருந்தாலும் இது இருவழிச்சாலையாகவே உள்ளது. மேலும் அதிக வளைவுகள்  மற்றும் குறுகிய திருப்பங்கள், மேடு பள்ளங்களும் அதிகம் உள்ளன. இதனால் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. 48 கிமீ தொலைவில் உள்ள  நெல்லையில் இருந்து தென்காசி செல்ல 2 மணி நேரத்திற்கு மேல் கால விரயம் ஆகிறது.

எனவே இச்சாலையை நான்குவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை  நீண்ட காலமாக இருந்துவந்தது. இதற்கு விடிவு ஏற்படும் வகையில் கடந்த  2017ம் ஆண்டு உலக வங்கியின்  ரூ.438  கோடி கடனுதவி ஒப்புதலுடன் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் 2ல் பணி  தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்படி நெல்லை பழையபேட்டை அருகே தொடங்கி தென்காசி  நகரின் முன்பகுதிவரை 45.6  கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்க  முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2017ம் ஆண்டு ஆய்வுக் கூட்டங்கள்,  பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிலஆர்ஜிதம் செய்யப்பட்டது. இதனையடுத்து ரூ.412 கோடியில் சாலை அமைக்க டென்டர் விடப்பட்டது.

கடந்த 2018 ஜனவரி மாதமே பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி வருகிற 2020ம் ஆண்டு இறுதிக்குள் இப்பணி நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர பாண்டியன் என்பவர் ஐகோர்ட் கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்; நெல்லை - தென்காசி 4 வழிச்சாலைக்கு அரசு ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் இன்னும் முடியவில்லை. 4 வழிச்சாலை திட்டப்பணிகள் 2020 செப்டம்பரில் முடிந்து இருக்க வேண்டும். நெல்லை - தென்காசி சாலையில் ஏராளமான அபாய வளைவுகள் உள்ளன; தண்டவாளங்களை கடந்து செல்லும் சூழல் உள்ளது.

தற்போதுள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். நெல்லை -  தென்காசி வரை உள்ள மாநில நெடுஞ்சாலையை விரிவுப்படுத்தி 4 வழிச்சாலையாக அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதிகள் அமர்வில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் பிப்.18- தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: