மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுகிறார்களா? தினமும் இணையத்தில் தகவல் பதிவிட உத்தரவு

சென்னை: பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் தற்போது பொதுத் தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக திறக்கப்பட்டுள்ளன. இதன்படி தற்போது 13 ஆயிரம் பள்ளிகளில் சுமார் 12 லட்சம் மாணவர்–்கள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களின் பேரில் பள்ளிகளுக்கு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வழிகாட்டி நெறிமுறை ஒழுங்காக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்டறிய பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் செல்போனுக்கு மேற்கண்ட தகவல்களை பதிவேற்றம் செய்ய வசதியாக TNEMIS என்ற பெயரில் மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது.

அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மாணவர்கள் பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்கிறார்களா என்பதையும் கண்காணித்து மேற்கண்ட செயலி மூலம் கல்வித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், பள்ளிகள் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறதா,  சுகாதாரத்துறை வழங்கிய மாத்திரைகளை மாணவர்கள் உட்கொள்கிறார்களா உள்ளிட்ட விஷயங்களை கண்காணித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.  அத்துடன் சுகாதாரத்துறை சார்ந்த மருத்துவர்கள் பள்ளிகளில் எத்தனை முறை பரிசோதனை மேற்கொண்டனர் என்றும் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>