சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜுக்கு திடீரென கொரோனா தொற்று தீவிரமாகி கவலைக்கிடமானது எப்படி? பரபரப்பு தகவல்கள்

சென்னை: தனியார் மருத்துவமனையில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜுக்கு திடீரென கொரோனா தொற்று தீவிரமாகி, தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்ன என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. ஆனாலும், கொரோனா தொற்றில் இருந்து தமிழகம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில்தான், தமிழக உணவு துறை அமைச்சர் காமராஜ் இந்த மாதம் தொடக்கத்தில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல்வேறு விழாக்களில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பிய அமைச்சர் காமராஜுக்கு லேசான காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்ததால் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி உள்நோயாளியாக அட்மிட் ஆனார். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.

பரிசோதனை முடிவில் அமைச்சர் காமராஜுக்கு ஆரம்ப கட்ட கொரோனா அறிகுறிதான் உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவையில்லை. அறையில் உள்ள ஆக்ஸிஜன் காற்றே போதுமானது. அவர் உடல் நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை சார்பில் 7ம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டது.அமைச்சர் காமராஜும் சாதாரண வார்டில்தான் சிகிச்சை பெற்று வந்தார். தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற நம்பிக்கையில், தனது சொந்த ஊரில் நடக்கும் (மன்னார்குடி) பொங்கல் விழாவுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று கூறி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார். சொந்த ஊரில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சி முடிந்த நிலையில்தான் மீண்டும் அமைச்சர் காமராஜுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கொரோனா தொற்றை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, சரியான ஓய்வு எடுக்காததால்தான் அவர் கவலைக்கிடமான நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அமைச்சர் காமராஜ் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், தமிழக அரசின் மருத்துவர்களும் அவரை கண்காணித்து வந்தனர். அங்கு சாதாரண வார்டில், இயல்பான முறையில் சிகிச்சை பெற்று வந்தார். முதல் கட்ட சோதனையிலேயே லேசான கொரோனா அறிகுறி தான் என்று தெரியவந்தது. ஆனாலும், அவரை ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்கும்படி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வற்புறுத்தினர். அரசு டாக்டர்களும், மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்காவிட்டாலும் பரவாயில்லை, சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சில நாட்கள் தனிமையில் இருந்து ஓய்வு எடுக்கும்படி வற்புறுத்தப்பட்டது.ஆனால் மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி அமைச்சர் காமராஜ், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றே ஆக வேண்டும் என்று கூறி சென்றார். அங்கு போன இடத்தில்தான் அவருக்கு கொரோனா தொற்று தீவிரமாகி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் மூச்சுத்திணறல் அதிகமானதால் மீண்டும் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து உடல்நிலை கவலைக்கிடமானதால், எக்மோ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, எக்மோ சிகிச்சை காரணமாக சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நுரையீரலில் சளி அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா அதிகளவில் தாக்கியுள்ளதால் கவலைக்கிடமாகவே உள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். மருத்துவர்களின் அறிவுரைபடி சென்னையை விட்டு செல்லாமல், அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் அல்லது வீட்டில் ஓய்வு எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டிருக்காது. அதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் பாதிப்பு இல்லை என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வு எடுப்பது முக்கியம் என்றார்.

மருத்துவமனை அறிக்கை

எம்ஜிஎம் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக உணவுத்துறை அமைச்சர் 19ம் தேதி இரவு 8 மணிக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் கொரோனா  தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல் நிலை சீராக உள்ளது’’ என தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி அமைச்சர் காமராஜ், தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று தீவிரமாகியது.

Related Stories: