மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் குழு பெரியாறு அணையில் ஆய்வு

கூடலூர் : பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் குழு நேற்று ஆய்வு செய்தனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயர வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் நித்யானந்த் ராய், இணை இயக்குநர் இஸ்லி ஐசக் கொண்ட குழுவினர் வைகை அணையின் முக்கிய நீர்வரத்தாக இருக்கும் பெரியாறு அணையை நேற்று ஆய்வு செய்தனர்.

முன்னதாக மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தேக்கடி படகுத்துறை வழியாக தமிழக அதிகாரிகளுடன் தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்ணகி படகில் பெரியாறு அணைக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதியை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது பெரியாறு அணை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர்கள் குமார், ராஜகோபால் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். இதையடுத்து இக்குழுவினர் குமுளி மலைச்சாலையிலுள்ள போர்பை டேம் பகுதியையும் ஆய்வு செய்தனர். பின்னர் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் வைகை அணைக்கு கிளம்பிச் சென்றனர்.

Related Stories: