சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை: மோடியை சந்தித்த பின் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு முதல்வர் எடப்பாடி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். நேற்று காலை பிரதமர் மோடியையும், நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசினார். இதையடுத்து நேற்று மதியம் முதல்வர் எடப்பாடி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று (நேற்று) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளேன். நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். கல்லணை புனரமைப்பு திட்டம், பவானி நவீனப்படுத்தும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்ட வருமாறும், சென்னை, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமரிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன், அவரும் இசைவளித்துள்ளார்.

இலங்கை சிறையில் இருந்து இன்று 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மீனவர்களையும் விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளேன். தொடர் மழை யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோதும் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. நான் வந்தது, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காக தான். தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரையும், பிரதமரையும் சந்தித்தேன். அரசியல் எதுவும் பேசவில்லை, பேசுவதற்கு தகுந்த நேரமும் இல்லை. ஏனென்றால் தேர்தல் வருவதற்கு காலம் உள்ளது.

பாஜ எத்தனை தொகுதி கேட்கிறார்கள் என்பதெல்லாம் தேர்தல் அறிவிப்பிற்கு பிறகுதான் முடிவு செய்யப்படும். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுக பொதுக்குழுவில் முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. சசிகலா வெளியில் வந்தால், அதிமுகவுடன் இணைவதற்கு வாய்ப்பே கிடையாது. அவர் அதிமுக கட்சியிலேயே கிடையாது. நாங்கள் சந்தித்தது தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றுதான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 100 சதவீதம் இதுதான் பேசினோம்.  அவரை (சசிகலா) அதிமுகவில் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

அதேபோன்று 100 சதவீதம் அவர் அதிமுகவில் சேர வாய்ப்பு இல்லை. அதிமுகவில் தெளிவாக முடிவு செய்யப்பட்டு, இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. அமமுக கட்சியில் இருந்து பல பேர் அதிமுகவுக்கு வந்துவிட்டார்கள், அவர் (டிடிவி தினகரன்) ஒருவர் தான் இருக்கிறார். அவரை ஜெயலலிதாவே பல்லாண்டு காலம் நீக்கி வைத்தார். ஜெயலலிதா இறந்த பிறகுதானே அவருக்கு பதவி கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா இருக்கும்போது, அவர் கட்சியிலேயே கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷா மிரட்டல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா சந்திப்பு குறித்து பாஜ மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘‘இந்த சந்திப்பில் பாஜவுக்கு 60 தொகுதிகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, கன்னியாகுமரி, கோவை, சென்னை, சேலம், திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் அதிக சீட் கேட்டுள்ளோம். இந்த மாவட்டங்களில் எங்களுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. ஆனால், அதிமுக மூத்த தலைவர்கள் குறைந்தது 170 முதல் 180 சீட் வரை நிற்க வேண்டும். அப்போதுதான் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என கூறி வருகின்றனர். கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் தங்களது கோரிக்கைகளை அழுத்தமாக வைத்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசவில்லை என்றாலும், நலத்திட்ட உதவிகள், நிதி பெற கோரிக்கை வைப்பதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நிதி அமைச்சரைத்தான் சந்திக்க வேண்டும். இதற்காக, தமிழக நிதி அமைச்சரான துணை முதல்வர் ஓபிஎஸ்.சை டெல்லிக்கு அழைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் நலத்திட்ட உதவி, நிதிகள் பெற முடியும். நிதிக்கு தொடர்பில்லாத உள்துறை அமைச்சரை முதல்வர் சந்தித்தது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம்தான். கூட்டணி நல்லா தான் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், இதை ஏன் முதல்வர் எடப்பாடி மறுக்கிறார் என தெரியவில்லை.

மேலும், பாஜகவின் கோரிக்கைகளுக்கு அவர்கள் இறங்கி வரவில்லை என்றால் டிடிவி.தினகரனுடன் சேர்ந்து புதிய கூட்டணி வைக்கவும் தயங்க மாட்டோம். இதை எடப்பாடியிடமும் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால் சசிகலா இல்லாத அதிமுகவை தற்போது தாங்கள் கட்டமைத்திருப்பதாகவும், கட்சி கட்டுக்கோப்பாக உள்ளதாகவும் எடப்பாடி தெரிவித்துள்ளார். மேலும், அவர் மீண்டும் மூத்த தலைவர்களுடன் பேசிவிட்டு முடிவை அறிவிப்பதாக கூறி உள்ளார் என்றனர். இதற்கிடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கடந்த வாரம் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்று பாஜ முக்கிய தலைவர்களை சந்தித்து சசிகலா விடுதலை குறித்து பேசி உள்ளார். அப்போது, தமிழக அரசியல் குறித்தும் டிடிவி.தினகரன் பாஜ தலைவர்களுடன் பேசி உள்ளார். அதில், அதிமுக, அமமுக இணைப்பு குறித்தும் பேசப்பட்டது. இதற்கு அதிமுக தலைவர்கள் தாங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்க முன்வரவில்லை என்றால் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க பாஜ ஒரு ரகசிய திட்டம் போட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த அமித்ஷா, எடப்பாடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் டிடிவி.தினகரன் மீண்டும் நேற்று முன்தினம் பெங்களூரு வழியாக ரகசியமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

அவர் மீண்டும் பாஜ தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியை, லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 10.30 மணிக்கு சந்தித்துப் பேசினார். இதேநேரத்தில் குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சரை சேர்த்து குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக தொகுதிக்காக அமித்ஷா ஒரு பக்கம் மிரட்டல் பாணியில் பேசி வரும்நிலையில், இந்த நடவடிக்கையும் அரசியல் பார்வையுடன் பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பிரதமரிடம் விடுத்த கோரிக்கைகள் என்ன?

முதல்வர் கூறியதாவது: கோதாவரி-காவிரி இணைப்பு  திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க  வேண்டும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் அதிகம் பயன்பெறும்  காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் மற்றும் காவிரி ஆற்றினை தூய்மைப்படுத்தும்  `நடந்தாய் வாழி காவிரி திட்டம்’ என இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அரசு  நிதியுதவி அளிக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நிலை-IIக்கு  நிதியுதவி அளிக்க வேண்டும், கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையை கிலோ 93.60  ரூபாயில் இருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்’ என்றார்.

மருந்துகள் பூங்கா

‘‘திருவள்ளூர் மாவட்டம், மணலூர்  மருந்துகள் பூங்கா மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ  கருவிகள் பூங்கா அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு நிதியுதவி  அளிக்க வேண்டும், இரண்டு மெகா டெக்ஸ்டைல் பூங்காக்களை தமிழ்நாட்டில் அமைக்க  வேண்டும். சென்னை,  சேலம், ஓசூர், கோவை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் ராணுவ தளவாட வளாகம்  விரைந்து செயல்படுத்த வேண்டும்.

Related Stories:

>