அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!

சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு குறித்து அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி, நேரு,  திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் படங்களுடன், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க கூறி, 1978-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர்  படங்களை வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

மேலும், மனுவில், 1990ம் ஆண்டு சட்டமேதை அம்பேத்கர் படமும், 2006-ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி, காயிதே மில்லத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர், தமிழன்னை  உள்ளிட்டோர் புகைப்படங்கள் வைக்க அனுமதித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்  மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர், வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக  உள்ளதாகவும்,அரசாணை பிறப்பித்து இத்தனை ஆண்டுகளுக்கு பின் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனு குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

அரசு பிளீடர் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் வைக்க வகை செய்துள்ள அரசாணையின்படி எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின்  விசாரணையை வரும் ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories:

>