கொரோனா விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் ஆய்வு: அதிகாரி தகவல்

சென்னை: கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கொரோனா தொற்று குறைந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டது. அந்தவகையில் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது முகக்கவசம், சமூக இடைவெளி, சானிடைசர் ஆகியவற்றை கையாண்ட பிறகே மது வழங்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், நாளடைவில் விதிமுறைகளை ஊழியர்கள் கடைபிடிக்கவில்லை என அரசுக்கும், டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கும் தொடர் புகார்கள் சென்றன. இதேபோல், டாஸ்மாக் பார்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை எனவும் புகார் சென்றது.

இதையடுத்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காதது குறித்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட புகார்கள் ஒவ்வொரு மாவட்ட மேலாளர்களுக்கும் வந்தபடி உள்ளன. எனவே, டாஸ்மாக் கடைகளில் தடுப்பு விதிமுறைகள் சரிவர கையாளப்பட்டு வருகிறதா, கடைகளின் முன்பு கிருமி நாசினி வைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட மேலாளர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. விதிகளை கடைபிடிக்காத கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories: