பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் சென்னையில் 1,600 ‘ஸ்மார்ட்’ கம்பங்கள்: நிர்பயா திட்டத்தில் அமைக்கப்படுகிறது

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் அவசரகால பட்டன் வசதியுடன் 1600 ஸ்மார்ட் கம்பங்கள் நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் அமைக்கப்படுகிறது. நிர்பயா நிதியின் கீழ் சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக ரூ.425 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன்படி ரூ.95 கோடி செலவில் 1,605 கம்பங்கள் அமையும்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: அவசரகால பட்டன், சிசிடிவி கேமரா, எல்இடி விளக்குகள் ஸ்மார்ட் கம்பத்தில் அமைந்திருக்கும்.

பெண் ஒருவர்தான் ஆபத்தில் இருப்பதை இந்த கம்பத்தில் உள்ள பட்டனை அழுத்தி தெரிவித்தால், உடனே அந்த கம்பத்தில் உள்ள கேமரா 180 டிகிரி கோணத்தில் சுழன்று சுழன்று படம் எடுக்கும். மாநகராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் தெரிவிக்கும். அது காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும், காவல் ரோந்து வாகனங்களுக்கும் தகவல் தெரிவிக்கும். குறுகிய நேரத்தில் தொடர்புடைய இடத்துக்கு போலீசார் வந்துவிட முடியும். கேமரா எடுத்த படங்களின் உதவியுடனும், குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும். இதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: