தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் 75 நிமிடம் ஆலோசனை அமித்ஷா-எடப்பாடி பேச்சில் இழுபறி: அதிக தொகுதி கேட்டு பாஜ பிடிவாதம்; முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக பாஜ மீது பரபரப்பு புகார்

புதுடெல்லி: தொகுதிப் பங்கீடு குறித்து அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக பாஜவினர் செய்த குழப்பங்கள் குறித்து அப்போது முதல்வர் எடப்பாடி புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அடுத்த ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது.

இந்த நிலையில் தேர்தலை சந்திக்கும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் எதிர்கட்சியான திமுகவின் தேர்தல் கூட்டணி என்பது உறுதியாகியுள்ள நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அந்த கட்சி அறிவித்து இருந்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என பாஜ தரப்பில் கூறப்படுவது தொடர் சர்ச்சையாக இருந்து வருகிறது.

இதனால் அதிமுக பாஜக கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலில் தொடருமா, அதேப்போல் அதில் பாமக, தேமுதிக இடம்பெறுமா? என்பது தற்போது வரை உறுதியாகாத நிலையில் தான் இருந்து வருகிறது. இதில் பாமகவை அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் விதமாக இரு முக்கிய அமைச்சர்கள் நடத்திய இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. மேலும் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என பாஜ தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தெரிவித்திருந்தாலும் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு என்பது தொடர்ந்து இருந்து கொண்டு தான் வருகிறது. இதையடுத்து மேற்கண்ட அனைத்து பிரச்னைகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவதற்காக கடந்த வாரமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேரம் ஒதுக்க பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் பாஜ கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வரவிருந்த நிகழ்ச்சியால் அது உறுதி செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் தமிழகம் வந்து டெல்லி திரும்பிய பாஜ கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தின் முழு அரசியல் நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் விளக்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக பிரதமர் அலுவலகத்தின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழலில் தான் நேற்று பிற்பகல் 12மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை 3மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். இவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோரும் வந்தனர். இதையடுத்து டெல்லி விமான நிலையம் வந்தடைந்த முதல்வருக்கு எம்பிக்கள் கே.பி.முனுசாமி, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து சாணக்கியாபுரி பகுதியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு தமிழக முதல்வர் சென்றார்.

இதைத்தொடர்ந்து மாலை 7.15 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயண திட்டத்தின் முதலாவதாக நேற்று மாலை 7.30 மணிக்கு டெல்லி கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது இல்லத்தில்  சந்தித்து பேசினார். சுமார் 75 நிமிடம் நடந்த இந்த ஆலோசனையின் போது தமிழக சட்டம் ஒழுங்கு, மாநிலத்தின் அரசியல் களம் நிலவரம் மற்றும் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி உடன்பாடு, சீட் பங்கீடு, சசிகலா விடுதலை ஆகியவை உட்பட ஒட்டு மொத்த மாநிலத்தின் சூழல் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தெரியவருகிறது.

அதில் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும். சிறிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைத்துள்ளன. அந்த கட்சிகளுக்கு நாங்கள் சீட் ஒதுக்கிக் கொள்கிறோம் என்று அமித் ஷா கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 34 சீட்டுக்கு மேல் விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவரின் பேச்சில் நேற்று உடன்பாடு ஏற்படவில்லை என்றும் இதனால் மீண்டும் பேச திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதுவரை கூட்டணியில் உள்ள பாஜ, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் டெல்லி மேலிடம் அறிவிக்கும் என்று கூறி வருகின்றனர். இதனால் தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளது. முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கும்படி எடப்பாடி, அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் அமைதியாக இருக்கும் பாஜ கடைசி நேரத்தில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்திவிடுமோ என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதாக கூறப்படுகிறது.

இதனால்தான் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை அமித்ஷாவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் தொகுதி ஒதுக்கீடு முடியாததால், அது குறித்த எந்த உறுதிமொழியும் அமித்ஷா வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தை இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், இன்று காலை 10.30மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். அப்போது நிலுவை நிதி, நதிகள் இணைப்பு, அரசியல் ஆகிய பல்வேறு முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வார் என தெரியவருகிறது.

* நேற்று மாலை 7.30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

* இருவரும் சுமார் 75 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.

* அப்போது, பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

* முதல்வர் எடப்பாடி, 34 சீட்டுக்கு மேல் விட்டுக் கொடுக்கவில்லை.

* உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் பேச திட்டம்.

Related Stories: