பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு

வாஷிங்டன்: பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு விழா நடக்கிறது. டிரம்ப் ஆதரவாளர்களின் கலவர அச்சுறுத்தலால் தலைநகர் வாஷிங்டனில் 25,000 ேதசிய காவல்படை வீரர்கள்  குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை மறுநாள் (ஜன. 20) பதவியேற்க உள்ளார்.  முன்னதாக இந்த தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் கட்சி தோல்வியுற்றும், அந்த தோல்வியை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாததால், தொடர்ந்து அவர் பிடிவாதமாக இருந்து வந்தார். இதற்கிடையில்,  கடந்த 6ம் தேதி வெற்றிபெற்ற ஜோ பிடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், 5 பேர் உயிரிழந்தனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு மத்தியில், ஜோ பிடனின் பதவியேற்பு விழாவும்  நாடாளுமன்ற கட்டிடத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இருந்தும் பிடனின் பதவியேற்பு விழாவின் போதும் ஆயுதம் ஏந்திய நபர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை  விடுத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதிக்குள் நுழைய கார் ஒன்று நேற்று வந்தது.

அப்போது அந்த காரை மறித்த பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஜோ பிடனின் பதவியேற்பு விழாவிற்கு வந்ததாக கூறிய நபரிடம் போலி அழைப்பிதழ் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த காரை ஆய்வு செய்தனர்.  அப்போது அந்த காரில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 509 தோட்டாக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.‌ உடனடியாக, கார் ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த  வெஸ்லி அலேன் பிலியர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பிடன் பதவியேற்பு விழாவின் போது, நாடாளுமன்ற கலவரத்தை போல நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களை நிகழ்த்த டிரம்ப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதனால்  தலைநகர் வாஷிங்டன் உள்பட அனைத்து மாகாணங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் வாஷிங்டனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிடன் பதவியேற்பு விழா  கொரோனா வழிகாட்டுதல் முறைப்படி நடப்பதால், தொலைக் காட்சி மூலம் விழாவை பார்க்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவச் செயலாளர் ரியான் மெக்கார்த்தி கூறுகையில், ‘எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பதவியேற்பு நாளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது. இருந்தும் விழாவுக்கு வரும் தலைவர்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை.  ஒவ்வொரு நபரையும் 3 முறை சோதனைக்கு உட்படுத்துவோம். தேசிய காவல்படை வீரர்கள் சுமார் 25,000 பேர் வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முந்தைய காலகட்டத்தை காட்டிலும், தற்போது இரண்டரை மடங்கு வீரர்கள்  சென்றுள்ளனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதால், முன்னுரிமை அடிப்படையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறோம்’ என்றார்.

Related Stories: