சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 21ம் தேதி 50,000 பேர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம்: மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாவட்டக்கழக அலுவலகத்தில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சென்னை தெற்கு மாவட்டச்செயலாளர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. இதை நடத்த முடியாத அளவிற்கு அதிமுக அரசு பல்வேறு வகைகளிலும் முட்டுக்கட்டை போட்டுப் பார்த்தது. முட்டுக்கட்டைகளை எல்லாம் திமுக தகர்த்தெறிந்து, மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் எனும் தலைப்பில் நடத்த தொடங்கியது.

இதற்கு 1 கோடியே 1 லட்சத்து 69 ஆயிரத்து 92 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் தலைப்பில் இதுவரை நகர மற்றும் கிராமங்களுக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 28 இடங்களில் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கிறது. மக்கள் கிராமசபை கூட்டங்கள், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில் வரும் 20ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதிலும் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என  1701 பேர் கூட்டங்களில் பங்கேற்று நடத்தி வருகின்றனர்.

16 ஆயிரம் இடங்களில் நடைபெறுவதாக இருந்த கூட்டங்கள் இன்றைக்கு 21 ஆயிரம் இடங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. வரும் 21ம்தேதி வேளச்சேரியில் ‘வேளச்சேரியா? வெள்ளச்சேரியா?’ எனும் தலைப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற உள்ளது. இதில்,  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பொதுநலச்சங்கங்களை சார்ந்தவர்களை ஒருங்கிணைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற உள்ளது. வரும் 24ம் தேதி திமுக தலைவர் பங்கேற்கும் மாபெரும் மக்கள் கிராமசபை கூட்டம் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அடையாளம்பட்டு ஊராட்சியில் நடத்தப்படவிருக்கிறது. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>