கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ: ஊழியர்கள் உயிர் தப்பினர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள டயர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நடந்தது. இதில் ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான டயர் கம்பெனி உள்ளது. இங்கு கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்து புகை மண்டலமாக மாறியது. இதனால் ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனிடையே கொழுந்துவிட்டு எரிந்த தீ தொழிற்சாலை முழுவதும் பரவி குடோன்களிலும் பரவியது. அங்கிருந்த டயர்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை  கட்டுப்படுத்தினர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: