திமுக ஆட்சியின்போது கொண்டுவந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு அரசியல் நோக்கத்துடன் கிடப்பில் போட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தருமபுரி: இன்று காலை, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தருமபுரி மாவட்டம் - பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட சூடனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய அவர்; இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கக்கூடிய உங்களையெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு, பூரிப்போடு வருக… வருக… வருக… என வரவேற்கிறேன். மிகுந்த ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள். எழுச்சியோடு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருக்கிறீர்கள். இப்போது இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நாம் தொடங்கப் போகிறோம். இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கக்கூடிய காட்சியை பார்க்கும் போது, உள்ளபடியே எனக்கு பெருமையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள், சகோதரிகள், தாய்மார்கள் அதிக அளவிற்கு வந்திருக்கிறீர்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக அளவில் வந்திருக்கிறீர்கள். இதை நம் வீட்டில் நடக்கின்ற நிகழ்ச்சி போல, திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதுபோல எல்லோரும் ஆர்வமாக வந்திருக்கிறீர்கள்.

அவ்வாறு வந்திருக்கும் உங்கள் அத்தனைப் பேரையும் மாவட்டக் கழகத்தின் சார்பிலும், ஒன்றிய கழகத்தின் சார்பிலும், தலைமை கழகத்தின் சார்பிலும் வருக… வருக… வருக… என வரவேற்கிறேன். இப்போது இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றால், இது இங்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் கடந்த 23-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா ஊராட்சிகளிலும் இதை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகத்தில் இருக்கும் எங்களைப் போன்ற முன்னணியினர், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் எல்லாம் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இப்போது இங்கு நான் வந்திருக்கிறேன் என்றால் இன்று மாலையில் நான் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குச் செல்கிறேன். இன்னும் சில மாவட்டங்களுக்கு செல்கிறேன். இப்படி பல மாவட்டங்களுக்கு நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். ஏறக்குறைய 12,000-க்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. எல்லா ஊராட்சிகளுக்கும் செல்ல முடியாது. அதே போல மாநகராட்சியில் வார்டுகள் இருக்கின்றன. அதனால், எல்லோரும் பிரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம். நமது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி இவர்கள் எல்லாம் ஒவ்வொரு பக்கத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்கள் எல்லாம் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு உங்களிடத்தில் நான் வந்திருக்கிறேன். இந்த தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தொகுதியில், இந்த ஊராட்சிக்கு உங்களை எல்லாம் சந்திக்க நான் வந்திருக்கிறேன். இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தைக் கூட நடத்தக்கூடாது என்று தடை போட்டார்கள். ஏனென்றால் தாய்மார்கள் அதிக அளவில் வருகிறார்கள். கிராமம் முழுவதும் வருகிறது. அதுமட்டுமின்றி அருகிலுள்ள கிராமத்தில் உள்ளவர்களும் வந்துவிடுகிறார்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள் அதிகமான அளவிற்கு வருகிறார்கள். இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் பொறுத்தவரை வந்தவர்கள் அப்படியே உட்கார்ந்து, கடைசி வரைக்கும் இருந்து கவனிக்கிறார்கள். இப்போது உங்களில் 10 பேரை பேச வைக்க போகிறேன். அந்த பெயர்களை எல்லாம் நாங்கள் தயாரித்து வைத்திருக்கிறோம். எல்லோரும் பேச வைக்க வேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை.

ஆனால் எல்லோரும் பேசினால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.  ஏனென்றால் இதை முடித்து விட்டு மதிய உணவிற்கு நீங்களும் போகவேண்டும், நானும் போகவேண்டும். எனக்கு மாலையில் வேறு நிகழ்ச்சி இருக்கிறது. உங்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கும். ஆதலால் அனைவரையும் பேச வைக்க வாய்ப்பு இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் கிராமத்தைப் பொறுத்த வரைக்கும் என்ன பிரச்சினை இருக்கும் என்றால், குடிநீர் பிரச்சினை இருக்கும், தெரு விளக்கு பிரச்சினை இருக்கும், சாலை வசதிகள் பிரச்சினை இருக்கும், சாக்கடை பிரச்சனை இருக்கும், சுகாதாரச் சீர்கேடு பிரச்சினை இருக்கும், பட்டா பிரச்சினை இருக்கும், சுயஉதவிக் குழு பிரச்சினை இருக்கும், ஓய்வு ஊதியப் பிரச்சினை இருக்கும், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து வசதிகள், ஏரி, குளம், மருத்துவமனைகள் இப்படிச் சில பிரச்சினைகள் எல்லா ஊராட்சிகளிலும் இருக்கும்.

10 பேர் பேசினாலே போதும். அதில் அவர்கள் நிச்சயமாக அனைத்தையும் பேசத்தான் போகிறார்கள். அதனால் எல்லாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. அந்த 10 பேரும் கூப்பிடும் போது எழுந்து, நின்ற இடத்தில் இருந்தே சுருக்கமாக 2 நிமிடத்தில் பேசுகிறீர்கள். 10 பேரையும் பேச வைத்துவிட்டு கடைசியாக நான் விரிவாக, நீங்கள் பேசுபவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி, நீங்கள் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று எல்லாம் தெளிவாக எடுத்து சொல்லவிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் எல்லாம் ஒரு நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள். என்ன நம்பிக்கை என்றால் கடந்த 10 வருடமாக தமிழ்நாட்டில் ஒரு அக்கிரமமான, அநியாயமான அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பலனும், பயனும் கிடைக்கவில்லை.

ஏற்கனவே கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டில் 5 முறை ஆட்சியை நடத்தி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் என்னென்ன வசதிகள், என்னென்ன திட்டங்கள், என்னென்ன சாதனைகள் கிடைத்தது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். அதையெல்லாம் திரும்ப எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதை எல்லாம் நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது இந்த 10 வருடமாக எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆட்சியில் எப்படியாவது இருக்கவேண்டும், பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும், ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறார்கள். ஏன் என்றால் இன்னும் இருக்கப்போவது 4 மாதங்கள் தான். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நாங்கள் கூட்டி இருக்கிறோம்.

நீங்கள் ஒரு குடும்ப உணர்வோடு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய கருத்துகளை உங்கள் அனைவரின் சார்பில் 10 பேர் பேசப் போகிறார்கள். இப்பொழுது அவர்களை நான் அழைக்கப் போகிறேன். அழைக்கப்படுகின்ற நேரத்தில் அவர்கள் இங்கே தங்களுடைய கருத்துகளை சுருக்கமாக பேசப்போகிறார்கள் இவ்வாறு பேசினார்.

Related Stories:

>