கருத்தரிக்காமலே கர்ப்பமானதாக நாடகமாடிய பெண்; தன்னுடைய குழந்தையை சுகாதாரத்துறையினர் விற்று விட்டதாக புகார்: திருப்பதி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பரபரப்பு

திருப்பதி: திருப்பதியில் கருத்தரிக்காமலேயே கர்ப்பமானதாக நாடகமாடிய பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை சுகாதார துறையினர் விற்றுவிட்டதாக புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சுரேஷ் - சசிகலா தம்பதியினர் உறவினர்களுடன் திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். காலையில் தங்களுக்கு பிறந்த குழந்தையை காணவில்லை என்று கூறி மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரசவம் நடக்காத பெண் ஒருவர் தங்களிடம் குழந்தையை காணவில்லை என கூறி தகராறு செய்வதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தனக்கு பிரசவ வலி வந்த பிறகு பிரசவம் பார்ப்பதாக மருத்துவர்கள் அழைத்து சென்றதாகவும் அதன் பின்னர் தான் மயக்க நிலையில் இருந்ததாகவும், அந்த பெண் தெரிவித்துள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது தங்களது குழந்தையை காணவில்லை எனவும் புகார் தெரிவித்தார். காவல்துறையினர் விசாரணையில் சசிகலா அனைவரையும் ஏமாற்றியது தெரிய வந்தது. கருத்தரிக்காமலேயே கருத்தரித்து போல நாடகமாடி அனைவரையும் ஏமாற்றியது தெரிய வந்தது.

மேலும் நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 5 மாத கர்ப்பிணியாக இருந்த சசிகலாவுக்கு கரு கலைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் இவ்வாறு செய்வது உண்டு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: