சென்னையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் பெயரளவில்தான் இருக்கிறது ‘ஸ்மார்ட் சிட்டி’: இன்னும் நடக்கும் அறிக்கை தயாரிப்பு பணி; போக்குவரத்து நெரிசல்; அடிப்படை வசதி இல்லை; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டியில் எந்த ஸ்மார்ட்டும் இல்லை. பெயரில்தான் இருக்கிறது. நகரில் எங்கும் காணோம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி முதல் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை, கோவை நகரங்களில் இந்த பணிகள் தொடங்கி 4 ஆண்டுகள் முடிந்து விட்டது. சென்னையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, ‘சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம்’ உருவாக்கப்பட்டு, அதன் மூலம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் 40 க்கு மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.141 கோடியில் 21 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.578 கோடியில் 18 பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ரூ.75 கோடியில் ஒரு பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் நிலையிலும் பல பணிகள் உள்ளன.

இதில் குறிப்பாக, 3.44 கோடியில் எல்இடி விளக்குகள் அமைக்கும் பணி, பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க ரூ.10 லட்சம், ‘நம்ம சென்னை செயலி’, ரூ.175 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள், 1.37 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பூங்கா, ரூ.2.07 கோடியில் நேப்பியர் பாலம் அருகே போக்குவரத்து பூங்கா அமைப்பது, ரூ.40 கோடி செலவில் பல அடுக்கு வாகன நிறுத்தம், ரூ.2.72 கோடியில் கண்ணம்மாபேட்டை மின் மயானத்தை நவீனப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதைத்தவிர்த்து ரூ.7 கோடியில் வாகன நிறுத்த மேலாண்மை பணி, மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் வரை இடைப்பட்ட பகுதியில் ஆகாய நடைபாலம் அமைக்கும் பணி, 11.75 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வாரியத்தின் 41 நீர் நிலையங்களில் உள்ள குடிநீர் நிரம்பும் குழாய்களில் கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் பணி, 75 கோடியில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இவற்றில் பொதுமக்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்த வித திட்டமும் செயல்படுத்தபடவில்லை என்றும், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வண்ணம் எந்த திட்டமும் செயல்படுத்தபடவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக சென்னையின் முக்கிய பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான திட்டங்களை செயல்படுத்தாமல், இருக்கும் சாலைகளின் அகலத்தை குறைத்து பெரிய நடைபாதை அமைக்கும் திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதைப்ேபான்று சென்னையின் பல்வேறு இடங்களில் சாலைகள் குறுகி பொதுமக்கள் எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதைத்தவிர்த்து சென்னையில் மிக முக்கிய பிரச்சனையாக மாறி வரும் குப்பை மறுசுழற்சியில் புதிய முறைகளை கையாள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, அடிப்படை வசதிகளை பெறுவதை மிகவும் எளிதாக மாற்றுவது உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதைத் தவிர்த்து எத்தனை திட்டங்களை ஆயிரம் கோடி செலவு செய்து செயல்படுத்தினாலும், அதனால் மக்களுக்கு எந்த வித பயனும் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் எதுவும் ஸ்மார்ட்டாக இல்லை. எல்லாம் பெயரளவில்தான் உள்ளது. அதை தற்போது தொடங்கப்பட்டுள்ள பாண்டிபஜார் சென்றாலே தெரிந்து விடும் என்கின்றனர் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்.

* ஒரு சிட்டிக்கு 1,000 கோடி செலவு

இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை  மத்திய அரசு 2015ம் ஆண்டு அறிவித்தது. இதன்படி இந்தியாவில் உள்ள 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்ற தலா ரூ.1000 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த மொத்த செலவுத் தொகையில் தலா 50 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கும். இதன்படி ரூ.500 கோடியை மத்திய அரசும், ரூ.500 கோடியை மாநில அரசும் வழங்கும்.

* தமிழகத்தில் 11 நகரங்கள்

மத்திய அரசின் முதல் பட்டியலில், சென்னை, கோவை மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் நகரங்களும், 3வது பட்டியலில் திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி நகரங்களும், 4வது பட்டியலில் ஈரோடு நகரமும் தேர்ந்தெடுக்கப்பட்டன.  இதன்படி, தமிழகத்தில் தற்போது 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

* 5 ஆண்டில் முடியுமா?

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வான நகரம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற வேண்டும். அதன்படி, மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட முதல் சுற்று ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலில் சென்னை, கோவை இடம் பெற்றன.

Related Stories:

>