உலக வங்கி கெடு முடிந்தநிலையில் அணைகள் புனரமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: உலக வங்கி விதித்த கெடு முடிந்த நிலையில் அணைகள் புனரமைப்பு பணிகளுக்கு மீண்டும் மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 120க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளது. இதில், பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 90 அணைகள் அடக்கம். இந்த அணைகள் பல ஆண்டுகளாக முறையாக புனரமைக்கப்படாததால், மறு கட்டுமானம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து உலகவங்கியின் நிதியுதவியின் கீழ் அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.748 கோடி செலவில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 69 அணைகள், மின்வாரியம் கட்டுபாட்டில் உள்ள 38 அணைகளை புனரமைக்க கடந்த 2012ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இப்பணி 7 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டன. ஆனால், இப்பணிக்கு முழுமையான அறிக்கை தயார் செய்து டெண்டர் விடுவதற்கு ஏற்பட்ட காலதாமததால் இப்பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், 2020 டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் கோரப்பட்டது. ஆனாலும், தற்போது வரை பொதுப்பணித்துறையில் 69 அணையில் 66 அணைகளில் பணிகளும், மின்வாரியத்தில் 20 அணையில் 15 அணைகளில் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 4 அணைகளில் முடியும் தருவாயில் உள்ளது. இதனால், உலக வங்கியிடம் கால அவகாசம் கேட்டு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது.

அதன்பேரில், வரும் மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே ஆரம்பத்தில் ரூ.748 கோடி செலவில் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், ரூ.830 கோடியாக திட்ட மதிப்பீடு செலவு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக அணைகள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1100 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறையில் 37 அணைகளும், மின்வாரியம் கட்டுபாட்டில் 22 அணைகள் புனரமைப்பு பணி மேற்கொள்ள உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக பணிகள் மார்ச் 31ம் தேதிக்குள் முடியும் பட்சத்தில், இரண்டாவது கட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்ததாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Stories: