காலியாக உள்ள ரேஷன் கடை விற்பனையாளர், உதவியாளர் பணிக்கு லட்சக்கணக்கில் பேரம் நடத்தும் ஆளுங்கட்சியினர்: இறுதி கட்ட கலெக்‌ஷனில் கலக்குகின்றனர் : அதிகாரிகளும் கைகோர்ப்பு

உள்ளூர் கட்சிக்காரர்கள்  போட்டியால் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு முறையாக நடத்தப்பட்டுள்ளது.

சென்னை: ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு லட்சக்கணக்கில் பேரம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், விற்பனை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விண்ணப்பம் அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துவதற்கான தேதி குறிப்பிடப்பட்டு வீட்டுக்கே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணத்தை காட்டி, இந்த பணிகள் சில மாவட்டங்களில் நிறுத்தப்பட்டு விட்டதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களை நியமனம் செய்ய மறைமுக பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் கூட்டுறவுத்துறை அமைச்சரின் பேரில் அதிகாரிகள் அமைதி காத்து வருகிறார்கள்.

ரேஷன் கடைகளில் வேலை என்றவுடன் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வேலையை பிடிக்க போட்டியிட்டு பல லட்சம் பணத்தை கொடுக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இது அரசு வேலையே இல்லை என்றுகூட தெரியாமல் ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் பணத்தை கொடுத்து, வேலைக்கான உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மூலமாக இந்த வேலைக்கு 7 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூட்டுறவு துறையில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:பொது விநியோக திட்ட விற்பனையாளர் (ரேஷன் கடை) பணிக்கு நேரடியாகவும், கூட்டுறவு வங்கிகளின் அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வழியாகவும் தமிழகம் முழுவதும் தேர்வு பணி நடந்து வருகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் வசதிக்குறைவானர்கள் தான்.

பொது விநியோக திட்ட அங்காடி விற்பனையாளர்கள் வேலைக்காக 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை பேரம் நடைபெறுகிறது. உள்ளூர் கட்சிக்காரர்கள் போட்டியால் இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு முறையாக நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் நேர்முகத்தேர்வு நடக்கும் முன்பே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், ஒவ்வொரு இணைப்பதிவாளரையும் அழைத்து எனக்கு ஒரு பணியிடத்திற்கு 7 லட்சம் தந்து விட வேண்டும். வெளியில் நான் மெரிட் என்று சொல்லிவிடுவேன் என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மத்திய வங்கியில் நேர்முக தேர்வு நடத்தி பட்டியலையும் வெளியிட்டு விட்டனர். ஒரு இணைப்பதிவாளர் உறவினரே ரூ12.5 லட்சம் கொடுத்துள்ள தகவல்களும் வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு என்பதெல்லாம் ஒரு கண்துடைப்புதான். விரைவில் தேர்தல் வர உள்ளதால், தேர்தல் செலவுக்கு பணம் சம்பாதிக்க ரேஷன் கடை உள்ளிட்ட பல துறைகளில் இப்படி ஒரு வழியை ஆளுங்கட்சியினர் பின்பற்றுகின்றனர். இளைஞர்கள் இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றனர்.

Related Stories: