பொங்கல் விளையாட்டு போட்டிக்கு அனுமதி மறுப்பு வடமதுரை அருகே சாலை மறியல்

வேடசந்தூர்: வேடசந்தூரை அடுத்த வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியில் பொங்கலையொட்டி விளையாட்டுப் போட்டி நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து விளையாட்டுப்போட்டி நடத்த அனுமதி வழங்கக் கூடாது என ஒரு தரப்பினர் வடமதுரை போலீசில் புகார் செய்தனர். இதனால், போலீசார் விளையாட்டு போட்டிக்கு அனுமதி மறுத்தனர். இதனால், ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் வெள்ளபொம்மன்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த வடமதுரை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர். அதன் பின் வாகனங்கள் சென்றன. இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேடசந்தூர் டிஎஸ்பி மகேஷ் மற்றும் வேடசந்தூர் தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், விளையாட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக 10 நாட்கள் கழித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: