தமாகா மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் காலமானார்: ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை:  தமாகாவின் மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்(71),  நெஞ்சுவலி காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கொரோனாவால்  உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் தேறி வந்தார். இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந் நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது.  இதையடுத்து அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார், இந்தநிலையில், நேற்று மதியம் ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஞானதேசிகனுக்கு திலகவதி என்ற மனைவியும், விஜய், பிரசன்னா என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.   தமாகாவில் மூத்த துணைத் தலைவராக பதவி வகித்து  வந்த  ஞானதேசிகன், இரண்டு முறை மாநிலங்களவைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  2011 செப்டம்பர் முதல் 2014 நவம்பர் மாதம் வரை  தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது காமராஜர், தியாகி சத்தியமூர்த்தி ஆகியோருக்கு சிலை  அமைக்கப்பட்டது.

 அவரது உடல் ஆழ்வார்பேட்டை ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நிர்வாகிகள் முனவர் பாஷா, சக்திவடிவேல், ஜவஹர்பாபு, ஆர்.எஸ்.முத்து, என்.டி.எஸ்.சார்லஸ், ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, அண்ணாநகர் ராம்குமார், ரவிச்சந்திரன் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 3 மணி அளவில் சென்னையில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.  ஞானதேசிகன் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ராமதாஸ், டிடிவி.தினகரன், மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி மாநில செயலாளர்கே.பாலகிருஷ்ணன், இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

3 நாள் துக்கம் அனுசரிப்பு: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை்,‘‘ தமாகா மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் மறைவை முன்னிட்டு, வரும் 17ம்தேதி வரை மூன்று நாட்களுக்கு அவரது மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும், அனைத்து இடங்களிலும் தமாகா கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட முகநூல் பதிவு: தமாகா துணைத் தலைவரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன். இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர். அவரை பிரிந்து வாடும் உற்றார், உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி இரங்கல்

தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:மூத்த அரசியல்வாதியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணை தலைவரும், முன்னாள் மாநிலங்களவை  உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

Related Stories:

>