மொழி பெயர்ப்பாளரை அழைத்து வந்து சீனர்களிடம் விசாரணை 46 சாப்ட்வேர்கள் மூலம் பொதுமக்களின் செல்போன்களில் இருந்து தகவல் திருட்டு

சென்னை: ஆன்லைன் கந்துவட்டி லோன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சீனர்களிடம் டெல்லியில் இருந்து சீனமொழி பெயர்ப்பாளரை அழைத்து வந்து சீனர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் 46 சாப்ட்வேர்கள் மூலம் பொதுமக்களின் செல்போன்களில் இருந்து தகவல் சட்டவிரோதமாக திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆன்லைன் ஆப் மூலம் 1 லட்சம் பேரிடம் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கில் சீனாவில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ஹாங்க் என்பவனை பிடிக்க சீன தூதரகத்திற்கு மாநகர காவல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மத்திய பிரிவு போலீசாரால் ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் பிரமோதா, பவான் மற்றும் சீனர்களான  ஜீயோ யமாவோ(38), வூ யானுலம்(23) ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்நிலையில் இவர்கள் 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி முடித்தனர். அதற்கு பிறகு அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட சீன செயலிகளை பயன்படுத்தி 46 சாப்ட்வேர்களை பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களை செல்போனில் இருந்து சட்ட விரோதமாக எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களின் தகவல்களை சட்ட விரோதமாக திருடியது குறித்து டெல்லியில் இருந்து சீன மொழி பெயர்ப்பாளரை அழைத்துவந்து ரா மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சீனர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைது செய்யப்பட்ட சீனர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.

Related Stories: