களைகட்டும் பொங்கல் கொண்டாட்டம்: அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு; ரேக்ளா ரேஸ், விளையாட்டு போட்டிகள் நடத்தி கிராமங்களில் உற்சாகம்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. அதிகாலையிலேயே பொதுமக்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு நடக்கிறது. ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டி ரேஸ், சேவல் சண்டை, கபடி போட்டி என்று கிராமங்களில் உற்சாகமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று உற்சாகத்துடனும், மண்ணின் மணத்துடனும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். அதன்படி, தை திங்கள் முதல் நாளான இன்றைய தினத்தை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் அதிகாலை முதலே கொண்டாட தொடங்கினர். வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குளித்து, புத்தாடை அணிவித்து அதிகாலை சூரியனை கும்பிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (4 நாட்கள்) அரசு விடுமுறையாகும். இதையொட்டி பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த சில நாட்களில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். தமிழக அரசும், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 10 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று வரை சுமார் 5 லட்சம் பேர் அரசு பஸ்சில் சொந்த ஊர் சென்றுள்ளனர். இதுதவிர ரயில், விமானம், கார்களிலும் பல லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டு: தைப்பொங்கல் தினமான இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதனை முன்னிட்டு அந்த ஊரே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கான திடல், பார்வையாளர், விஐபி கேலரிகள், வாடிவாசல்கள் தயார் நிலையில் உள்ளன. தொடர்ந்து, நாளை (ஜன. 15) பாலமேடு, மறுநாள் (ஜன. 16) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பார்வையிடுகின்றனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் துவக்கி வைக்கின்றனர். இதேபோல ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டி பந்தயம், சேவல் சண்டை, கபடி போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் பல்வேறு ஊர்களில் பொங்கலையொட்டி நடத்தப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த சில நாட்களாக சென்னை, புறநகர் பகுதிகளில் மற்றும் திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இவர்கள் உற்சாகத்துடன் புதுத்துணிகள் வாங்கினர். இதனால் சென்னையில் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதி ஜவுளிக்கடைகளில் நேற்று வழக்கத்தைவிட அதிக கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இன்று, பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடினர். பொங்கல் பண்டிகையை கொண்டாட நேற்று முதல் கரும்பு, மஞ்சள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர். 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கரும்பு கட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.400 வரை விற்கப்பட்டது. இதே கரும்பு ஊர்களில் ரூ.500க்கு விற்கப்பட்டது.

அதன்படி, ஒரு கரும்பின் விலை ரூ.30 முதல் ரூ.35 வரை விற்கப்பட்டது. அதேபோன்று மஞ்சள் கட்டுகளையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வழக்கமாக இன்று பொங்கல் பண்டிகை முடிந்து, அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், தொடர்ந்து காணும் பொங்கல் என்று தமிழகத்தில் 3 நாள் சிறப்பாக கொண்டாடுவார்கள். காணும் பொங்கலை கொண்டாட பொதுமக்கள் குடும்பத்துடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சென்று மகிழ்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தமிழக அரசு 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை செல்ல தடை விதித்துள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

* கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்

கோயம்பேடு உருளை கிழக்கு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் கரும்பு விற்பனை களை கட்டியுள்ளது. தேனி கரும்பு ஒரு கட்டுக்கு ரூ.450க்கும், மற்ற மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கரும்பு ஒரு கட்டுக்கு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையானது. இதேபோன்று பொங்கல் கொண்டாடும் போதும் சாங்கியத்துக்காக குலை மஞ்சளை பயன்படுத்துவார்கள். இந்த குலை மஞ்சள் திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு மற்றும் ஆந்திராவில் இருந்து வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: