சேதுபாவாசத்திரத்தில் இடைவிடாத மழை கள்ளிக்குளம் கரை உடைந்ததால் மல்லிப்பட்டிணம் வெள்ளக்காடானது: குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் குளங்கள் உடைப்பு பல்வேறு  கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது.

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் கடந்த ஒரு மாதமாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த மூன்று நாட்களாக பெய்து  வரும் கன மழையால் பல்வேறு இடங்களில் வடிகால் வசதியின்றி வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர்கள் போக்குவரத்து  சாலைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து வடிகால் வசதி செய்துள்ளனர். போக்குவரத்தும் கிடையாது. பல்வேறு இடங்களில் ஏரி குளங்கள்  உடைப்பெடுத்து வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.  நிலக்கடலை சாகுபடி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலுமாக பாதித்துள்ளது. மல்லிப்பட்டிணம் கள்ளிக்குளம்  உடைப்பெடுத்து மருதுபாண்டியர் நகர், காயிதே மில்லத் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே  முடங்கினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.பாபநாசம்: பாபநாசத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தப்படி இருந்தது.

காலையிலும் தொடர்ந்த மழையால் பாபநாசம்  பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. தொடர் மழையால் சாலைகள் சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.  நடைப்பாதை வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையால் நெற் பயிர்கள் பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

52 குடும்பம் முகாமில் தஞ்சம்

அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் புதுக்கோட்டை உள்ளூர், நடுவிக்காடு, மழவேநீர் காடு, தம்பிக்கோட்டை, தாமரங்கோட்டை, தொக்காலிக்காடு,  மாளியக்காடு, ஏரிப்புறக்கரை, சேண்டாகோட்டை, பள்ளிகொண்டான், பழஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து  வருகிறது. இதையொட்டி அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பேரூராட்சி ஊழியர்கள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றனர்.

தாழ்வான பகுதியில் குடியிருக்கும் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 52 குடும்பத்தினரை பாதுகாப்பு கருதி அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து

துண்டிப்பு

பேராவூரணி பகுதியில் கடந்த ஆண்டு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து கனமழையாக பெய்து வருகிறது. கடந்த ஆண்டு வீசிய நிவர்  மற்றும் புரவி புயல்களின்போது கடைமடை பகுதியில் குறைந்த அளவே மழை பெய்தது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்  அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கிடக்கிறது.

இது தவிர கடலை, எள், உளுந்து உள்ளிட்ட  பயிர்களுக்கு நாசமடைந்துள்ளது. மேலும் மழைநீர் சூழ்ந்து நிற்பதால் வீட்டு சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பேராவூரணி-அறந்தாங்கி  செல்லும் சாலையில் சித்தாதிக்காடு அருகே தரைப்பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: