பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் சேவல் சண்டை: நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது

அரவக்குறிச்சி:  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் சேவல் கட்டு நடைபெறும். இதில் ஏராளமான சேவல்களுடன் சேவல்கட்டு பிரியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வார்கள். தமிழர்களின் பாராம்பரியமான விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்ற விளையாட்டுக்களுடன் பொங்கல் பண்டிகையின் போது இந்த சேவல்கட்டும் சிறப்பானதாகும். பூலாம்வலசில் நடைபெறும்  சேவல்கட்டின் போது சேவல் கட்டு பிரியர்கள், அதனை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க வரும் பார்வையாளர்கள் என்று பூலம்வலசு கிராமமே களைகட்டி இருக்கும். இந்த சேவல் கட்டு, மக்கள் கலாச்சாரத்துடன் ஒன்றிய வீர விளையாட்டாக கருதப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சேவல் கட்டில்  கலந்து கொள்ள சுற்றுப் பகுதியிலுள்ள ஊர்களில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட அன்டை மாநிலங்களில் இருந்தும் சேவல் கட்டு பிரியர்கள்  இதற்கென்றே பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட ஏராளமான கட்டு சேவலுடன் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நாளை (13ம் தேதி) முதல் தொடர்ந்து 3 நாட்கள் இந்த சேவல்கட்டு நடத்தப்படுகிறது.

பூலாம்வலசு கிராமத்தில் சேவல்கட்டு நடைபெறும் இடத்தில் முட்கள் உள்ளிட்டவைகளை அகற்றி சுத்தப்படுத்தி, மூங்கில் தடுப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.. போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு போட்டியாளர்களும் தங்களது சேவல்களை களத்தில்  நேருக்கு நேர் பார்க்கும்படி நிறுத்தி விட்டு, பிறகு கையில் எடுத்துக் கொள்வார்கள். பின்பு சேவல்களை மோத விடுவார்கள். தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடும் சேவல்கள் தோல்வியை தழுவியதாக கருதப்படும்.  பல்வேறு பிரிவுகளில்,  குழுக்களாக பிரித்து சேவல் சண்டை நடத்தப்படும். தோல்வியை தழுவிய சேவலை, வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளர் பெற்றுக் கொள்வார்.

சத்துள்ள உணவுகள் கொடுத்து வளர்க்கப்படுவதால் கட்டுச் சேவல் கறி, மிகவும் ருசியாக இருக்கும் என கூறப்படுவதால் அதனை வாங்கிச் செல்லவும் இந்த சமயங்களில் ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள். இந்த சேவல் சண்டை போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் முறையான அனுமதி வழங்கவில்லை என்றும், வாய்மொழி உத்தரவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா வழிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது என்பது பற்றியும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் போட்டி நாளை முதல் நடைபெற உள்ளது.

Related Stories: